செய்திகள்
பிரதமர் மோடியுடன் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்

நியூயார்க்கில் பிரதமர் மோடி-டிரம்ப் இன்று இரவு சந்திப்பு

Published On 2019-09-24 08:28 GMT   |   Update On 2019-09-24 08:28 GMT
பிரதமர் நரேந்திர மோடி இந்திய நேரப்படி இன்று இரவு 9.45 மணிக்கு நியூயார்க் நகரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்திக்கிறார்.

நியூயார்க்:

74-வது ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 7 நாள் பயணமாக கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

ஹூஸ்டன் நகரில் நடந்த மோடி நலமா? என்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். இதில் பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்பும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரம் இந்தியர்கள் பங்கேற்றனர்.

இந்த பிரமாண்ட கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் ஹூஸ்டனில் இருந்து நேற்று நியூயார்க் புறப்பட்டு சென்றார்.

ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் ஏற்பாட்டில் நடைபெற்ற பருவ நிலை மாநாட்டில் மோடி கலந்து கொண்டார். பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.

இதையடுத்து கத்தார், ஜெர்மனி, நெதர்லாந்து, பூடான், கொலம்பியா, நைசர், இத்தாலி, மாலத்தீவு, நமீபியா ஆகிய நாட்டு தலைவர்களை மோடி சந்தித்தார். அந்தந்த நாடுகளுடனான நட்புறவு, முதலீடு, உள்ளிட்ட புரிந்துணர்வு பேச்சு வார்த்தை நடத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடி இந்திய நேரப்படி இன்று இரவு 9.45 மணிக்கு நியூயார்க் நகரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்திக்கிறார்.

பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேசுகிறார்கள்.

ஐ.நா. பொது சபையில் டிரம்ப் உரையாற்றிய பிறகு இந்த சந்திப்பு நடை பெறுகிறது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேற்று டிரம்ப்பை சந்தித்தார். அப்போது இம்ரான்கான் முன்னிலையில் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் என்று டிரம்ப் 3-வது முறையாக அறிவித்தார்.

இதனால் டிரம்ப்- மோடி சந்திப்பின் போது காஷ்மீர் பிரச்சினை பற்றி பேசப்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. காஷ்மீர் பிரச்சினையில் 3-வது நாடு தலையிடுவதை விரும்பவில்லை என்று இந்தியா ஏற்கனவே தெளிவுபடுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News