செய்திகள்
இம்ரான் கான், டிரம்ப் செய்தியாளர் சந்திப்பு

இவர்களை எங்கே கண்டுபிடித்தீர்கள்?- பத்திரிகையாளர் சந்திப்பில் இம்ரான் கானை கிண்டல் செய்த டிரம்ப்

Published On 2019-09-24 07:24 GMT   |   Update On 2019-09-24 07:24 GMT
காஷ்மீர் தொடர்பான பாகிஸ்தான் பத்திரிகையாளரின் கோபத்திற்கு பதிலளித்த டிரம்ப், 'இது போன்ற நிருபர்களை நீங்கள் எங்கே கண்டு பிடித்தீர்கள்?'என்று இம்ரான் கானிடம் கிண்டலாக கூறினார்.
நியூயார்க்:

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் கூட்டாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது  காஷ்மீர் விவகாரம் தொடர்பாக கோபத்துடன் பாகிஸ்தானின் பத்திரிகையாளர் ஒருவர் டிரம்பிடம் கேள்வி கேட்டார். இதற்கு பதிலளித்த டிரம்ப், உங்கள் கேள்வி ஒரு அறிக்கையைப் போலவே தெரிகிறது, என்று கேலி செய்தார்.

பின்னர் அந்த நிருபரை நோக்கி, "நீங்கள் அவருடைய (இம்ரான்) அணியைச் சேர்ந்தவரா? நீங்கள் ஒரு அறிக்கையை வெளியிடுகிறீர்கள், கேள்வி கேட்கவில்லை” என டிரம்ப் கூறினார்.

அதிபர் டிரம்பால் கேலி செய்யப்பட்ட பின்னர்  பேசிய பத்திரிகையாளர், "நான் அவரது (இம்ரான் கான்) அணியில்  உறுப்பினராக இல்லை, ஆனால் ஒரு சுயாதீன பத்திரிகையாளராக இருக்கிறேன், நான் எனது கேள்வியை முடிக்கிறேன்..." என கூறி கேள்வியை முன்வைத்தார்.

சில கேள்விகளுக்கு டிரம்ப் பதில் அளித்தபின்னர், பாகிஸ்தான் பத்திரிகையாளர் மீண்டும் ஒரு கேள்வியைக் கேட்க முயன்றார். அப்போது குறுக்கிட்ட டொனால்ட் டிரம்ப், ‘மிகச் சிறிய, ஒரு வினாடி அறிக்கையாக கொடுங்கள்’ என்றார்.

நிருபர் முன்னோக்கி சென்று காஷ்மீர் விஷயத்தில் பாகிஸ்தானின் தவறான பார்வையை பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து கேள்வி எழுப்பினார்.

அப்போது இம்ரான் கானை நோக்கி திரும்பிய டிரம்ப், "இது போன்ற நிருபர்களை நீங்கள் எங்கே கண்டுபிடித்தீர்கள்?” என கிண்டலாகக் கேட்டார். இதனால் அங்கு சிரிப்பலை எழுந்தது. இம்ரான் கான் மற்றும் அவருடன் சென்ற குழுவினருக்கு தர்மசங்கடம் ஆகிவிட்டது.

இதைத் தொடர்ந்து, பத்திரிகையாளர் சந்திப்பை நேரடியாக ஒளிபரப்பிய ஒரு பாகிஸ்தான் சேனல் உடனடியாக ஒளிபரப்பை நிறுத்தியது.

தொடர்ந்து காஷ்மீர் விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த டொனால்ட் டிரம்ப், இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டால் மட்டுமே காஷ்மீர்  பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக கூறினார்.
Tags:    

Similar News