செய்திகள்
தீயில் எரியும் வணிக வளாக கட்டிடங்கள்

இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் வலுக்கும் போராட்டம் - மோதல்களில் 20 பேர் பலி

Published On 2019-09-23 15:33 GMT   |   Update On 2019-09-23 15:33 GMT
இந்தோனேசியா நாட்டுடன் இணைக்கப்பட்ட பப்புவா மாகாணத்துக்கு தன்னாட்சி உரிமை கோரி நடக்கும் போராட்டத்தில் இன்று வெடித்த மோதல்களில் 20 பேர் கொல்லப்பட்டனர்.
ஜகர்தா:

’டச்சு’ என்றழைக்கப்படும் டென்மார்க் நாட்டு காலனி நாடாக இருந்த பப்புவா பகுதி நியூ கினியா நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்திருந்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டின்படி கடந்த 1969-ம் ஆண்டில் அங்குள்ள பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இந்தோனேசியா நாட்டின் ஒரு பகுதியாக பப்புவா இணைக்கப்பட்டது. பின்னர் பப்புவா மாகாணமாக அறிவிக்கப்பட்ட இப்பகுதியில் இருந்து மேற்கு பப்புவா என்ற புதிய மாகாணம் உருவாக்கப்பட்டது.

எனினும், பூர்வீக பப்புவா வாசிகளுக்கும் இந்தோனேசியா நாட்டு மக்களின் கலாச்சாரம் மற்றும் வழிபாட்டு முறைகளுக்கும் வெகுவாக ஒத்துப் போகவில்லை. இதனால் அந்நாட்டு பாதுகாப்பு படையினருக்கும் பப்புவா மக்களுக்கும் இடையில் அவ்வப்போது உரசல்கள் ஏற்பட்டு வந்தது.

மேலும், கனிமவளங்கள் நிறைந்த பப்புவா மற்றும் மேற்கு பப்புவா பகுதிகளுக்கு தன்னாட்சி உரிமை வழங்கக்கோரி சமீபகாலமாக இங்குள்ள சில மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளன.



இங்குள்ள வாமெனா பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியின் ஆசிரியர் பப்புவாவை சேர்ந்த இரு மாணவனை ‘குரங்கு’ என்று அழைத்ததாக கடந்த வாரத்தில் வதந்திகள் பரவின. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் ஒருவாரமாக பப்புவா மாகாண தலைநகரான ஜயப்புராவில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பூர்வீக பப்புவா வாசிகள் மற்றும் இந்தோனேசிய மக்கள் பயங்கரமாக மோதிக் கொண்டனர். நாளடைவில் வன்முறையாக மாறிய இந்த தொடர் போராட்டத்தில் அரசு அலுவலகங்கள், வாகனங்கள், கடைகள் மற்றும் வீடுகள் தீயிட்டு எரிக்கப்பட்டன.
.
தலைநகர் ஜயப்புராவில் இன்று உச்சக்கட்டத்தை எட்டிய போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்களில் 3 பேர் உயிரிழந்தனர். வாமெனா மற்றும் பிறபகுதிகளில் இன்று நடந்த இருதரப்பு மோதல்களில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 5 போலீசார் உள்பட சுமார் 70 பேர் காயமடைந்ததாகவும் பப்புவா மாகாண செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News