செய்திகள்
யூடியூப்

சீனாவில் யூ டியூப்பை பார்த்து பாப்கார்ன் செய்த சிறுமிக்கு நேர்ந்த சோகம்

Published On 2019-09-22 22:06 GMT   |   Update On 2019-09-22 22:06 GMT
சீனாவில் யூ டியூப்பை பார்த்து பாப்கார்ன் செய்த சிறுமி சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
பீஜிங்:

சீனாவை சேர்ந்த யியா என்ற பெண் யூ டியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் அவர் உணவு பண்டங்களை வித்தியாசமாக மற்றும் எளிமையான முறையில் தயாரிக்கும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சுமார் 4 கோடி பேர் யியாவின் யூடியூப் சேனலை பின்தொடர்கிறார்கள். இந்த நிலையில், காலியான குளிர்பான டின்னை கொண்டு பாப்கார்ன் செய்வது எப்படி என வீடியோ ஒன்றை யியா தனது யூடியூப் சேனலில் பதிவிட்டிருந்தார். அதை பார்த்த செசே என்ற 14 வயது சிறுமி, தனது தோழி சியாவு (12) உடன் சேர்ந்து அதேபோல் பாப்கார்ன் செய்ய முயற்சித்தார். ஆனால், அவர் குளிர்பான டின்னுக்கு பதிலாக மதுபான டின்னை பயன்படுத்தினார். இதனால் அந்த டின், திடீரென வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. இதில் சிறுமிகள் 2 பேரும் பலத்த தீக்காயம் அடைந்தனர். செசே 93 சதவீத தீக்காயத்துடனும், சியாவு 13 சதவீத காயத்துடனும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

2 வாரங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், செசே சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். சியாவு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தோல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

இதற்கிடையே சிறுமியின் உயிரிழப்புக்கு யூ டியூப்பில் வீடியோ போட்ட யியாதான் காரணம் என குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. எச்சரிக்கை வாசகம் குறிப்பிடாதது தவறுதான் என்றாலும், சிறுமி, தான் பயன்படுத்திய அதே கருவிகளை பயன்படுத்தவில்லை என்று யியா விளக்கமளித்துள்ளார். எனினும் சிறுமியின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோரியுள்ள அவர், இழப்பீடு வழங்கவும் முன்வந்துள்ளார். 
Tags:    

Similar News