செய்திகள்
பெஞ்சமின் நேதன்யாகு - பென்னி கன்ட்ஸ்

இஸ்ரேலில் ஒருங்கிணைந்த ஆட்சி அமைக்க எதிர்க்கட்சி தலைவருக்கு நேதன்யாகு அழைப்பு

Published On 2019-09-19 11:02 GMT   |   Update On 2019-09-19 11:02 GMT
இஸ்ரேலில் ஒருங்கிணைந்த ஆட்சி அமைக்க எதிர்க்கட்சி தலைவரான பென்னி கன்ட்சுக்கு பிரதமர் நேதன்யாகு இன்று அழைப்பு விடுத்துள்ளார்.
ஜெருசலேம்:

இஸ்ரேலில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் பெஞ்சமின் நேதன்யாகு பிரதமராக இருந்து வருகிறார். இவரது ஆட்சிக் காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, 120 இடங்களை கொண்ட இஸ்ரேல் பாராளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி தேர்தல் நடந்தது.

இதில் பெஞ்சமின் நேதன்யாகுவின் வலதுசாரி கட்சியான ‘லிகுட்’ கட்சி அதிகபட்சமாக 37 இடங்களை கைப்பற்றியது. எனினும் ஆட்சி அமைப்பதற்கு 61 இடங்கள் தேவைப்பட்டதால் பழமைவாத கட்சியான ஐக்கிய டோரா யூத கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் கூட்டணி ஏற்படுத்தினார்.

எனினும், இஸ்ரேல் ராணுவத்தில் கட்டாய சேவையாற்றுவதில் இருந்து பழமைவாத யூத மதப் பள்ளி மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் விவகாரத்தில் பெய்டனு என்ற கட்சி பெஞ்சமின் நேதன்யாகு அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றது.

இதனால் பாராளுமன்றத்தில் அவருக்கான பெரும்பான்மை பலம் 60 ஆக குறைந்தது. எனவே பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு திடீர் தேர்தலை பெஞ்சமின் நேதன்யாகு அறிவித்தார். இஸ்ரேல் வரலாற்றிலேயே, தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, மறுதேர்தல் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

அதன்படி இஸ்ரேலில் கடந்த 5 மாதங்களில் 2-வது முறையாக நேற்று முன்தினம் பொதுத்தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் சுமார் 92 சதவீத வாக்குகள் பதிவானது.

தேர்தலுக்கு முன்னர் வெளிவந்த கருத்துக்கணிப்பு முடிவுகளில் பிரதமரின் ‘லிகுட்’ கட்சிக்கும் முன்னாள் ராணுவ தளபதி பென்னி கன்ட்ஸ் தலைமையிலான ‘புளூ அன்ட் ஒயிட்’ கட்சிக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவும் என்று தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையே, தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் பெஞ்சமின் நேதன்யாகுவின் ‘லிகுட்’ கட்சி 32 இடங்களை கைப்பற்றியது. எதிர்க்கட்சியான பென்னி கன்ட்சின் ‘புளூ அன்ட் ஒயிட்’ கட்சி 33 இடங்களை கைப்பற்றியுள்ளது. புதிய அரசை அமைப்பதில் சிறிய கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும் என தெரிகிறது.

குறிப்பாக நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு காரணமாக இருந்த பெய்டனு கட்சிதான் யார் ஆட்சி அமைக்க வேண்டும்? என்பதை முடிவு செய்யும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், இஸ்ரேலில் ஒருங்கிணைந்த ஆட்சி அமைக்க எதிர்க்கட்சி தலைவரான பென்னி கன்ட்சுக்கு பிரதமர் நேதன்யாகு இன்று  அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மூன்றாவதாக தேர்தல் நடைபெறாத வகையில் ஒருங்கிணைந்த ஆட்சி அமைக்க புளு அண்ட் ஒயிட் கட்சி தலைவரான பென்னி கன்ட்சுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News