செய்திகள்
டிரம்ப்

முன்னுரிமை வர்த்தக நாடுகள் பட்டியலில் இந்தியாவை சேர்க்க அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்

Published On 2019-09-19 02:21 GMT   |   Update On 2019-09-19 02:21 GMT
முன்னுரிமை வர்த்தக நாடுகள் பட்டியலில் இந்தியாவை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகத்திடம் அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வாஷிங்டன் :

இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளை வர்த்தக முன்னுரிமை நாடுகள் என அமெரிக்கா பட்டியலிட்டு, ஜி.எஸ்.பி. என்று அழைக்கப்படுகிற திட்டத்தின்கீழ் சலுகைகளை வழங்கி வந்தது. இது நீண்டகாலமாக பின்பற்றி வந்த நடைமுறை ஆகும்.

இந்த நடைமுறையின்கீழ், அமெரிக்க சந்தைக்கு வாகன உதிரிபாகங்கள், ஜவுளி வகைகள் உள்பட சுமார் 2 ஆயிரம் பொருட்களை வரியின்றி இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஏற்றுமதி செய்ய முடியும்.

இந்த திட்டத்தின்கீழ் இந்தியா, அமெரிக்காவுக்கு 5.6 பில்லியன் டாலர் (சுமார் ரூ.39,200 கோடி) மதிப்பிலான பொருட்களை கடந்த ஆண்டு வரியின்றி ஏற்றுமதி செய்தது.

ஆனால், இப்படி இந்தியா சலுகைகளை பெற்றுக்கொண்டு, தங்களுக்கு வர்த்தக ரீதியில் எதிராக செயல்படுவதாக அமெரிக்கா கருதுகிறது. குறிப்பாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்து, வரி விதிப்பு மன்னனாக இந்தியா திகழ்கிறது என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கருதுகிறார்.

இதன் காரணமாக முன்னுரிமை வர்த்தக நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவை அமெரிக்கா நீக்கியது. இதற்கான நிர்வாக உத்தரவை டிரம்ப் கடந்த ஜூன் மாதம் பிறப்பித்தார். இது இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அமெரிக்காவுக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவை மீண்டும் முன்னுரிமை வர்த்தக நாடுகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை டிரம்ப் நிர்வாகத்திடம் அமெரிக்காவில் செல்வாக்குமிக்க 44 எம்.பி.க்கள் வைத்துள்ளனர்.

இது தொடர்பாக ஜிம் ஹிம்ஸ், ரான் எஸ்டெஸ் ஆகியோர் தலைமையில் ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் 26 பேர், குடியரசு கட்சி எம்.பி.க்கள் 18 பேர் கூட்டாக ஒரு கடிதத்தை டிரம்ப் நிர்வாகத்தில் வர்த்தக பிரதிநிதியாக உள்ள ராபர்ட் லைத்தீசருக்கு எழுதி உள்ளனர்.

உரிய பலனை அடைவதற்கு சீக்கிரமாக அறுவடை செய்ய வேண்டும் என்ற அணுகுமுறையை டிரம்ப் நிர்வாகம் பின்பற்ற வேண்டும்; அதுதான், அமெரிக்க தொழில்களுக்காக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் சந்தை அணுகல் ஆதாயங்களை அடைய வழி வகுக்கும் என அவர்கள் அந்த கடிதத்தில் கூறி உள்ளனர்.

இது தொடர்பாக ஜி.எஸ்.பி. கூட்டணியின் செயல் இயக்குனர் டான் ஆண்டனி கூறும்போது, “இந்தியாவை முன்னுரிமை நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கியதால் டாலர் இழப்பு, வேலை இழப்பு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்திடம் கம்பெனிகள் கூறுகின்றன. இப்போது அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைத்தீசருக்கு எம்.பி.க்கள் எழுதியுள்ள கடிதம், இந்தியாவை மீண்டும் முன்னுரிமை வர்த்தக நாடுகள் பட்டியலில் சேர்ப்பதற்கு துரிதமான நடவடிக்கை எடுத்து, இரு தரப்பு வர்த்தகத்துக்கு உதவ வேண்டும் என்பதில் நாடாளுமன்றம் வலுவாக இருக்கிறது என்பதை காட்டுகிறது” என குறிப்பிட்டார்.

மேலும், இந்தியாவை நீக்கியதால் ஜூலை மாதத்தில் மட்டுமே அமெரிக்க நிறுவனங்களுக்கு 3 கோடி டாலர் (சுமார் ரூ.210 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுவதாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா செல்லும்போது 22-ந் தேதி டிரம்பை சந்தித்து பேசுகிறார். இந்த தருணத்தில் இந்தியாவை மீண்டும் முன்னுரிமை வர்த்தக நாடுகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று அமெரிக்க எம்.பி.க்கள், டிரம்ப் நிர்வாகத்தை வலியுறுத்தி இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Tags:    

Similar News