செய்திகள்
இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல்

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு

Published On 2019-09-18 01:12 GMT   |   Update On 2019-09-18 01:12 GMT
இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர்.
ஜெருசலேம்:

120 இடங்களை கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடந்தது. இதில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ தொடர்ந்து, 5-வது முறையாக பிரதமர் பதவியை தக்கவைத்து கொள்ள போட்டியிட்டார்.

இதில் பெஞ்சமின் நேட்டன்யாஹூவின் வலதுசாரி கட்சியான ‘லிகுட்’ கட்சி 37 இடங்களை கைப்பற்றியது. அதனை தொடர்ந்து தேசியவாத கட்சிகளுடன் கூட்டணியை ஏற்படுத்தி ஆட்சியமைத்தார். ஆனால் இஸ்ரேல் பெய்டனு கட்சி பெஞ்சமின் நேட்டன்யாஹூ அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றது.

இதனால் நாடாளுமன்றத்தில் அவருக்கான பெரும்பான்மை பலம் 60 ஆக குறைந்தது. பெரும்பான்மைக்கு வெறும் ஒரு நபர்தான் குறைவு என்றபோதிலும் மாற்று ஏற்பாட்டை செய்யாமல் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை அறிவித்தார்.

அதன்படி இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் மக்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர். மக்கள் ஆர்வத்துடன் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றியதால் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடந்தது.

இந்த தேர்தலில் பிரதமரின் ‘லிகுட்’ கட்சிக்கும் முன்னாள் ராணுவ தளபதி பென்னி கன்ட்ஸ் தலைமையிலான ‘பூளு அன்ட் வொயிட்’ கட்சிக்கும் இடையில் பலத்த போட்டி நிலவுகிறது. 2 கட்சிகளுக்குமே தலா 32 இடங்களை கைப்பற்றும் என்ற கருத்து நிலவுகிறது.

எனவே யார் வலுவான கூட்டணியை அமைக்கிறார்களோ அவர்களே ஆட்சியை கைப்பற்ற முடியும். பெஞ்சமின் நேட்டன்யாஹூவின் வலுவான கூட்டணியை அமைத்து மீண்டும் ஒருமுறை பிரதமர் பதவியை தக்க வைத்துக்கொள்வாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 
Tags:    

Similar News