செய்திகள்
தீப்பிடித்து எரியும் படகு

கலிபோர்னியா படகு தீ விபத்து- இந்திய தம்பதியர், விஞ்ஞானி உயிரிழப்பு

Published On 2019-09-07 07:25 GMT   |   Update On 2019-09-07 07:25 GMT
கலிபோர்னியாவில் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த தம்பதியர் மற்றும் இந்திய வம்சாவளி விஞ்ஞானி ஆகியோர் உயிரிழந்தனர்.
லாஸ் எஞ்சல்ஸ்:

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சன்டாகுரூஸ் தீவு பகுதியில் உள்ள கடலில் ஸ்கூபா டைவிங் நீச்சல் செய்வதற்கான நிகழ்ச்சி மூன்று நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக ஒரு குழுவினர் அந்த தீவினை சுற்றியுள்ள கடல் பகுதிக்கு படகில் சென்றனர். சன்டாகுரூஸ் தீவு அருகே நிறுத்தப்பட்டிருந்த அந்த படகு கடந்த திங்கட்கிழமையன்று திடீரென தீப்பிடித்து மூழ்கியது.
 
நீச்சல் குழுவினர் படகில் தூங்கிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக படகில் தீவிபத்து ஏற்பட்டது. இதனால், பயணிகள் 33 பேர், ஊழியர்கள் 6 பேர் என படகில் இருந்த 39 பேரும் சிக்கிக்கொண்டனர். இதில், 5 ஊழியர்கள் மட்டும் படகின் மேற்பகுதியில் தூங்கியதால் வெளியே குதித்து உயிர்தப்பினர். மற்ற 34 பேரும் உயிரிழந்தனர்.

இந்நிலையில், படகு விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த தம்பதியர் கவுஸ்துப் நிர்மல்(44), சஞ்சீரி தியோபுஜாரி (31) ஆகியோரும் இந்திய வம்சாவசி விஞ்ஞானி சுனில் சிங் சந்து (46) ஆகியோரும் உயிரிழந்திருப்பதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

இந்திய தம்பதியர் கனெக்டிகட் நகரில் வசித்து வந்தனர். தியோபுஜாரி நார்வாக்கில் பல் மருத்துவராகவும்,  எர்ன்ஸ்ட் & யங் நிறுவனத்தில் நிர்மல் ஆலோசகராக வேலை பார்த்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

பாலோ ஆல்டோ ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றி வந்த விஞ்ஞானி சந்து, அமெரிக்காவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருவதாகவும், அவரது குடும்பம் சிங்கப்பூரில் இருப்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.
Tags:    

Similar News