செய்திகள்
ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம்

ஹாங்காங் போராட்டத்தின் எதிரொலி: சீனாவுக்கு நாடு கடத்தும் சட்ட திருத்த மசோதா வாபஸ்

Published On 2019-09-05 03:52 GMT   |   Update On 2019-09-05 03:52 GMT
கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங்கில் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், அந்த மசோதா தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது.
ஹாங்காங்:

ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது.

இந்த சட்ட திருத்த மசோதாவை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். போராட்டக்காரர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என வலியுறுத்தி இரண்டு மாதங்களுக்கு மேலாக மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.



வார இறுதியில் மட்டுமே நடந்த போராட்டங்கள், வார நாட்களிலும் நடைபெற்றது. இதன் விளைவாக போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வலுத்து வந்தது. இதையடுத்து சீன ராணுவத்தின் படைப்பிரிவுகள் ஹாங்காங் நகருக்கு அணி வகுத்தது.

இந்த படைப்பிரிவில் விமானப்படை, கடற்படை மற்றும் ராணுவம் ஆகிய முப்படைகளைச் சேர்ந்த 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வீரர்கள் போராட்டக்காரர்களை தடுக்க முற்பட்டதாக தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. ஆனால், போராட்டக்காரர்களை தடுக்க முடியவில்லை.

இந்நிலையில் இந்த போராட்டத்தின் எதிரொலியாக, இதனை முடிவுக்கு கொண்டு வரவும், அமைதியை நிலை நாட்டவும் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெறுவதாக ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி கேரி லாம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.


Tags:    

Similar News