செய்திகள்
உஜ்வாலா ஸ்ரீஹர்ஷா சன்னி

இங்கிலாந்து மலைப்பகுதியில் வாலிபர் பிரேதம்: தெலுங்கானா மாநில பாஜக தலைவரின் மகனா?

Published On 2019-09-03 14:30 GMT   |   Update On 2019-09-03 14:30 GMT
இங்கிலாந்து மலைப்பகுதியில் கிடைத்துள்ள வாலிபரின் பிரேதம் தெலுங்கானா மாநில பாஜக தலைவர் மகனின் உடலா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லண்டன்:

தெலுங்கானா மாநிலத்தின் கம்மம் மாவட்ட பாஜக தலைவராக இருப்பவர் ஹனி உதய் பிரதாப். இவருக்கு உஜ்வால் ஸ்ரீஹர்ஷா சன்னி (24) என்ற மகன் உள்ளார். இவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள குயின் மேரி பல்கலைகழகத்தில் உயர்கல்வி பயின்றுவந்தார். 

இதற்கிடையில், கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி இந்தியாவில் உள்ள பெற்றோரிடம் கைபேசி மூலம் ஸ்ரீஹர்ஷா பேசினார். அதன் பின்னர் ஸ்ரீஹர்ஷாவை யாராலும் தொடர்புகொள்ள முடியவில்லை. 

இதையடுத்து, லண்டன் போலீசாரிடம் ஸ்ரீஹர்ஷாவை காணவில்லை என புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரையடுத்து, லண்டன் போலீசார்   கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) முதல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவந்தனர். ஹெலிகாப்டர் மூலமாகவும் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இங்கிலாந்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள அந்நாட்டின் சூஸ்செக்ஸ் பகுதியில் உள்ள பீச்சி ஹேட் என்ற இடத்தில் உள்ள மலைமுகடு ஒன்றில் அடையாளம் தெரியாத வாலிபரின் பிரேதம் ஒன்றை போலீசார் இன்று கண்டுபிடித்துள்ளனர். 

இது காணமல்போன தெலுங்கான பாஜக தலைவரின் மகனாக இருக்கலாம் என போலீசார் சந்தேகம் எழுப்பியுள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து உஜ்வாலின் குடும்பத்தாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, விசாரணை நடைபெற்றுவருவதாக தெரிவித்துள்ள போலீசார், பிரேதம் கைப்பற்றப்பட்ட பகுதி அதிக தற்கொலைகள் நடைபெறும் இடம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
Tags:    

Similar News