செய்திகள்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

‘இந்தியாவுடன் ஒருபோதும் போரை தொடங்கமாட்டோம்’ - இம்ரான்கான் திடீர் பல்டி

Published On 2019-09-02 21:56 GMT   |   Update On 2019-09-02 21:56 GMT
இந்தியாவுடன் ஒருபோதும் நாங்கள் போரை தொடங்கமாட்டோம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
லாகூர்:

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக உலக நாடுகளின் ஆதரவை பெற முயற்சித்தது. ஆனால் அதில் தோல்வியடையவே பின்னர் போர் குறித்த பேச்சு களை எடுத்தது.

காஷ்மீரில் இந்தியாவின் நடவடிக்கைகளை உலக நாடுகள் தடுக்கவில்லை என்றால், அணு ஆயுத பலம் கொண்ட இரு நாடுகளும் ராணுவ நடவடிக்கையை நோக்கி தள்ளப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மிரட்டல் விடுத்தார்.

ஆனால் இந்த விவகாரத்தில் தற்போது அவர் பல்டி அடித்துள்ளார். எந்த பிரச்சினைக்கும் போர் தீர்வு ஆகாது எனக்கூறி உள்ளார்.

லாகூர் கவர்னர் மாளிகையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், இது தொடர்பாக பேசும்போது கூறுகையில், ‘எந்த பிரச்சினைக்கும் போர் ஒரு தீர்வை கொடுக்காது என்பதை இந்தியாவுக்கு நான் கூற விரும்புகிறேன். போரில் வெற்றி பெறுபவர் கூட ஒரு தோல்வியாளர் தான். ஏனெனில் புதிய பிரச்சினைகளுக்கு போர் வழிவகுக்கும்’ என்று குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறும்போது, ‘இந்தியாவுடன் ஒருபோதும் நாங்கள் போரை தொடங்கமாட்டோம். இரு நாடுகளும் அணு ஆயுதங்களை கொண்டிருக்கின்றன. பதற்றம் அதிகரித்தால் உலகம் ஆபத்தை எதிர்கொள்ளும்’ என்றும் கூறினார்.
Tags:    

Similar News