செய்திகள்
ஏமனில் நடந்த தாக்குதலின் ஒரு பகுதி

கூட்டாளி மீதே தாக்குதல் நடத்திய ஐக்கிய அரபு அமீரகப்படைகள்

Published On 2019-08-30 12:03 GMT   |   Update On 2019-08-30 12:29 GMT
ஏமன் நாட்டில் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டுவந்த ஐக்கிய அரபு அமீரகப்படைகள் அரசு படைகள் மீதே வான்வெளி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்துயுள்ளது.
சனா:

ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுப் படைகளுடன் கிளர்ச்சியாளர்கள் நடத்திவரும் மோதலில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

அரசுப் படையினருக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. இந்த கூட்டுப்படையில் ஐக்கிய அரபு அமீரகமும் அங்கம் வகிக்கிறது.



இந்நிலையில், அந்நாட்டின் தெற்கு பகுதியில் ஏடன் மற்றும் அப்யான் மாகாணங்களில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படையில் அங்கம் வகிக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் விமானப்படை வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் அரசுப்படையினரின் ராணுவ முகாமை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், இதில் பாதுகாப்பு படையினர் மற்றும் அப்பாவி பொதுமக்கள் உள்பட 300-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் என ஏமன் அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. 

ஏமன் அரசின் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தங்கள் நாட்டு விமானப்படை பயங்கரவாத முகாம்களை மட்டுமே தாக்கியது என தெரிவித்தது. மேலும் இந்த தாக்குதல் ஒரு தற்காப்பு நடவடிக்கையே எனவும் கூறியுள்ளது.
Tags:    

Similar News