செய்திகள்
பிரிட்டன் அதிபர் போரிஸ் ஜான்சன்

அமேசான் காடுகளில் தொடரும் தீ விபத்து- பிரிட்டன் 10 மில்லியன் பவுண்டுகள் உதவித்தொகை

Published On 2019-08-26 10:49 GMT   |   Update On 2019-08-26 10:49 GMT
அமேசான் மழைக்காடுகளை புத்துயிர் பெறச் செய்யும் முயற்சிகளுக்கு பிரிட்டன் அரசு 10 மில்லியன் பவுண்டுகள் உதவித்தொகை வழங்க உள்ளதாக அதிபர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
பைரியாட்ஸ்:

ஏழு நாட்டு உலகத்தலைவர்கள் பங்குபெறும் ஜி 7 மாநாடு பிரான்ஸ் நாட்டின் பைரியாட்ஸ் நகரில் மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது காட்டுத்தீயினால் அழிந்து வரும் அமேசான் மழைக்காடுகள் பற்றி விவாதிக்கப்பட்டது. 

இதில் கலந்துகொண்டுள்ள பிரிட்டன் அதிபர் போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமேசான் மழைக்காடுகள் இடைவிடாது பற்றி எரியும் காட்டுத்தீயினால் பெருமளவு பாதிக்கப்பட்டு வருகிறது. நம் கண்முன்னே பூமியின் முக்கிய ஆக்சிஜன் மையமான காடுகள் எரிந்து வருகின்றன. நமக்கு ஏற்பட்டுள்ள  இந்த இயற்கை பேரழிவிலிருந்து நாம் விலகி இருக்க முடியாது.

தீ விபத்துக்குள்ளான மழைக்காடுகளை மறுசீரமைக்கும் முயற்சிகளுக்கு பிரிட்டன் அரசு 10 மில்லியன் பவுண்டுகள் வழங்க உள்ளது. இயற்கை சுற்றுச்சூழலை பாதுகாக்காமல் பருவநிலை மாற்றத்தை தடுக்க முடியாது, பருவநிலை மாற்றத்தை தடுக்காமல் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியாது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி அடுத்த ஆண்டு பிரிட்டனில் ஐநா பருவநிலை மாற்ற மாநாடு நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம்”, என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அமேசான் காடுகள் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளுக்கும் உதவி செய்ய உலகத் தலைவர்கள் முன்வந்துள்ளனர் என  ஜி7 மாநாட்டில் பேசிய பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News