செய்திகள்
அனி மெக்லைன்

விண்வெளியில் இருந்து வந்த முதல் புகார் -நாசா விசாரணை நடத்த முடிவு

Published On 2019-08-26 04:19 GMT   |   Update On 2019-08-26 04:29 GMT
சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து முதல் முறையாக நாசாவுக்கு புகார் ஒன்று வந்துள்ளது. இதனை நாசா விசாரிக்க முடிவெடுத்துள்ளது.
வாஷிங்டன்:

விண்வெளியில் அமெரிக்கா, கனடா, ஜப்பான், ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி மையத்தை நிறுவியுள்ளன. இந்த மையத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த அனி மெக்லைன் 6 மாதங்கள் விண்வெளியில் தங்கி ஆய்வில் ஈடுபட்டு வந்தார். கடந்த ஜூன் மாதம் மீண்டும் நாடு திரும்பினார். இவர் விண்வெளியில் இருந்தபோது குற்றச்செயலில் ஈடுபட்டதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரை, சம்மர் வுடன் என்பவர் கொடுத்துள்ளார். இவர் அனியின் தன் பாலின துணை ஆவார். சம்மரின் சொந்த வங்கிக் கணக்கை அனி, விண்வெளியில் இருந்த சமயத்தில் கையாண்டதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.



இதனையடுத்து நாசா, அனியிடம் விசாரணை நடத்த முடிவெடுத்துள்ளது. இது குறித்து அனி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், இந்த புகாரில் எந்தவித உண்மையும் இல்லை. துரதிர்ஷ்டவசமாக இப்போது ஊடகங்களில் ஒரு வேதனையான சூழலில் நாங்கள் இருவரும் தனித்தனியே பயணிக்கிறோம்.

எனக்கு ஆதரவளிப்பவர்களை  நான் பாராட்டுகிறேன். இதுபற்றி மேற்கொண்டு கருத்து கூற விரும்பவில்லை. ஐ.ஜி செயல்பாட்டில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது’ என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். 
Tags:    

Similar News