செய்திகள்
சபாநாயகர் குழந்தைக்கு புட்டிப்பால் ஊட்டிய காட்சி

நாடாளுமன்ற விவாதத்தின்போது எம்.பி.யின் குழந்தைக்கு புட்டிப்பால் ஊட்டிய சபாநாயகர்

Published On 2019-08-22 18:49 GMT   |   Update On 2019-08-22 18:49 GMT
நாடாளுமன்ற விவாதத்தின்போது எம்.பி.யின் குழந்தைக்கு சபாநாயகர் புட்டிப்பால் ஊட்டிய சம்பவம் சமூக வளைதளத்தில் வேகமாக பரவிவருகிறது.
வெல்லிங்டன்:

நியூசிலாந்தில் தொழிலாளர் கட்சியின் எம்.பி.யாக இருப்பவர் டமாடி கோபி. ஓரின சேர்க்கையாளரான இவர் டிம் ஸ்மித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் வாடகை தாய் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஸ்மித் கோபி என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ‘பேறுகால விடுமுறையில்’ இருந்த டமாடி கோபி, நேற்று முன்தினம் தனது குழந்தை உடன் நாடாளுமன்றத்திற்கு வந்தார். அப்போது சபையில் நடந்த விவாதம் ஒன்றில் அவர் பங்கேற்று பேசினார்.

அப்போது சபாநாயகர் டிரவர் மல்லார்ட், டமாடி கோபியிடம் இருந்து குழந்தையை வாங்கி தனது மடியில் வைத்து கொண்டு சபையை நடத்தினார். பின்னர் அவர் குழந்தைக்கு பாட்டிலில் பாலூட்டினார்.

டிரவர் மல்லார்ட் தான் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டார்.

அதில் அவர் “பொதுவாக சபாநாயகர் இருக்கை என்பது அவையை நடத்துபவர்களுக்கு உரியது. ஆனால் இன்று ஒரு மிக முக்கியமான மனிதர் என்னுடன் இந்த நாற்காலியை பகிர்ந்து கொள்கிறார். எம்.பி டமாடி கோபி-டிம் ஸ்மித் இருவருக்கும் உங்களது குடும்பத்தின் புதிய வரவுக்காக மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற சபாநாயகரின் இந்த செயலுக்கு நியூசிலாந்து மக்களிடம் பாராட்டு குவிகிறது.
Tags:    

Similar News