செய்திகள்
கிரீன்லாந்து தீவு

கிரீன்லாந்து தீவு விவகாரத்தில் டென்மார்க் பிரதமரின் பேச்சு மிக மோசம் - டிரம்ப்

Published On 2019-08-22 15:57 GMT   |   Update On 2019-08-22 15:57 GMT
கிரீன்லாந்து தீவு விவகாரத்தில் டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சனின் பேச்சு மிகவும் மோசமானது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான டென்மார்க்கின் தன்னாட்சி பெற்ற பிராந்தியம் கிரீன்லாந்து. ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய தீவு இதுவாகும்.

எண்ணெய் மற்றும் தாதுக்கள் போன்ற இயற்கை வளங்கள் கொட்டி கிடக்கும் கிரீன்லாந்தை வாங்க விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார். 

இது குறித்து கருத்து தெரிவித்த டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் “கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல. அதனை வாங்க விரும்பும் டிரம்பின் யோசனை அபத்தமானது” என கூறினார்.

இந்நிலையில், கிரீன்லாந்து தீவு விவகாரத்தில் டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சனின் பேச்சு மிகவும் மோசமானது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.



இதுதொடர்பாக, செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறுகையில், டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சனின் பேச்சு பொருத்தமற்ற மற்றும் மிகவும் மோசமான ஒன்று. நீங்கள் டொனால்டு டிரம்ப் என்ற தனிநபரிடம் பேசவில்லை, அமெரிக்க நாட்டுடன் பேசுகின்றீர்கள். 

எனவே அமெரிக்காவுடன் பேசும்போது இது போன்ற நாகரீகமற்ற முறையில் பேச வேண்டாம். நான் அதிபர் பதவியில் நீடிக்கும் வரையாவது நீங்கள் இவ்வாறு பேசுவதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், டென்மார்க் மிகவும் வளர்ச்சியடைந்த நாடு. அதன் எல்லைகள் நேட்டோ படையால் சிறப்பாக பாதுகாக்கப்பட்டுள்ளது. அதிக வளர்ச்சியடைந்த நாடாக இருந்தாலும் நேட்டோ படைக்கு வழங்க வேண்டிய பங்கு தொகையை மிகவும் குறைவாகவே அளித்துவருகிறது என குற்றம் சாட்டினார். 
Tags:    

Similar News