செய்திகள்
ரஷ்யா அனுப்பியுள்ள மனித உருவ ரோபோ

விண்வெளிக்கு செல்லும் ரஷ்யாவின் முதல் மனித உருவ ரோபோ

Published On 2019-08-22 08:33 GMT   |   Update On 2019-08-22 08:33 GMT
ரஷ்யா முதல் முறையாக ‘ஃபெடார்’ என்ற மனித உருவிலான ரோபோவை சர்வதேச விண்வெளி மையத்திற்கு இன்று அனுப்பியுள்ளது.
மாஸ்கோ:

கசகஸ்தான் நாட்டின் பாய்கோர்  மாகாணத்தில் உள்ள ரஷ்யாவின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று சோயுஸ் எம் எஸ்-14 என்ற ஆளில்லா விண்கலம் அனுப்பப்பட்டது. இந்த விண்கலத்துடன் ‘ஃபெடார்’ என்ற மனித உருவ ரோபோவும் அனுப்பப்பட்டுள்ளது. 

இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், “ஸ்கைபோட் எஃப் 580 என்ற அடையாள எண்ணுடன் அனுப்பப்பட்டுள்ள இந்த ரோபோ, சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு அவசர காலங்களில் உதவி செய்வதற்காக 10 நாட்கள் பயிற்சி மேற்கொள்ள இருக்கிறது. இந்த ரோபா 1.8 மீ உயரமும் 160 கிலோ எடையும் கொண்டது. இது, மின் இணைப்புகளை சரி செய்தல், தீயணைப்பான்களை பயன்படுத்துதல் போன்ற பணிகளை விரைவாகச் செய்யும்.

சோயுஸ் விண்கலங்கள் பொதுவாக விண்வெளி வீரர்களுடன் பயணங்கள் மேற்கொள்ளும். ஆனால் இம்முறை புதிய அவசர மீட்பு அமைப்பை சோதிக்கும் பொருட்டு எந்த மனிதர்களும் பயணிக்கவில்லை” என்றார். 

இதே போன்று 2011 ஆம் ஆண்டு அமெரிக்கா விண்வெளி மையமான நாசா, ரோபோனாட்-2 என்ற மனித ரோபோவை அனுப்பியது. ஆனால் அது தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக 2018ம் ஆண்டு திருப்பி அனுப்பப்பட்டது.

2013 ஆம் ஆண்டு ஜப்பான் இதே போன்று கிரோபோ என்ற சிறிய ரோபோவை அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News