செய்திகள்
ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமெனி

காஷ்மீரில் முஸ்லிம்கள் மீதான அடக்கு முறையை இந்தியா தடுக்க வேண்டும் -ஈரான் தலைவர்

Published On 2019-08-22 05:31 GMT   |   Update On 2019-08-22 05:31 GMT
காஷ்மீர் விவகாரத்தில் அங்குள்ள முஸ்லிம் மக்களின் மீது நடத்தப்படும் அடக்குமுறையை இந்தியா தடுக்க வேண்டும் என ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார்.
தெஹ்ரான்:

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி லடாக்-ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான், சீனா கண்டனம் தெரிவித்து இருந்தது. இதில் பாகிஸ்தான், இந்தியாவுடன் தூதரக உறவை துண்டிப்பதாகவும், இருநாட்டு வர்த்தகத்தை தடை செய்வதாகவும் கூறியிருந்தது.

மேலும் சர்வதேச அளவில் ஐ.நாவில் பாகிஸ்தான் கொண்டு வந்த இந்த காஷ்மீர் விவகாரம் தோல்வியை தழுவியது. இந்நிலையில் காஷ்மீர் நிலவரம் குறித்து ஈரான் தலைவவர் அயத்துல்லா அலி காமெனி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:



தற்போது காஷ்மீரில் வசிக்கும் முஸ்லிம்களின் நிலை குறித்து கருத்தில் கொண்டுள்ளோம். இந்தியாவுடன் நல்ல நட்பு ஈரானுக்கு இருக்கிறது. இருப்பினும், இந்திய அரசு காஷ்மீரில் வசிக்கும் உன்னத மக்களுக்காக சிந்திக்க வேண்டும்.

இதனை கருத்தில் கொண்டு சிறந்த கொள்கையை பின்பற்றி, இங்கு முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை மற்றும் கொடுமையினை தடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

காஷ்மீரின் தற்போதையை நிலை மற்றும் இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான மோதல்கள் ஆகியவை இந்திய துணைக் கண்டத்தை விட்டு வெளியேறும்போது, பிரிட்டிஷ் அரசு எடுத்த மோசமான நடவடிக்கைகளின் விளைவே ஆகும். காஷ்மீருக்கு பாதிப்புகளை ஏற்படுத்தவே, இந்த காயத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் விட்டுச் சென்றது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.





 



 
Tags:    

Similar News