செய்திகள்
டிரம்ப்

காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் - டிரம்ப் மீண்டும் அறிவிப்பு

Published On 2019-08-21 08:05 GMT   |   Update On 2019-08-21 08:05 GMT
காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் அறிவித்துள்ளார்.
வாஷிங்டன்:

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை கடந்த 5-ந்தேதி மத்திய அரசு ரத்து செய்தது. ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய 2 யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது.

இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து பதற்றத்தை ஏற்படுத்தியது. காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க சீனா உதவியுடன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு கொண்டு சென்றது. ஆனால் இந்த முயற்சி தொல்வியில் முடிந்தது. இதை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தை தணிக்கும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டன. இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசினார்.

இதற்கிடையே இந்தியாவுக்கு எதிரான வன்முறையை தூண்டி விடுவதாக பாகிஸ்தான் மீது பிரதமர்மோடி அமெரிக்க அதிபர் டிரம்பிடம் குற்றம் சாட்டினார். டெலிபோனில் 30 நிமிடம் இதுகுறித்து அவர் பேசினார்.

இதை தொடர்ந்து இம்ரான்கானுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் பேசினார். அப்போது இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை தவிரிக்கும்மாறு அவர் இம்ரான்கானிடம் வலியுறுத்தினார். மேலும் தெற்காசிய பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் டிரம்ப் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகைளில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- காஷ்மீர் விவகாரத்தில் என்னால் முடிந்த உதவிகளை செய்ய முயற்சித்து வருகிறேன். காஷ்மீர் நீண்ட காலமாகவே சர்ச்சைக்குரிய இடமாக இருந்து வருகிறது. இரு நாடுகள் இடையே மிகப்பெரிய பிரச்சினை உள்ளன.



இந்துகள்-முஸ்லீம் இணைந்து வாழ விருப்பம் இல்லாத பகுதியாக காஷ்மீர் உள்ளது. இந்த பிரச்சினையில் சுமூக தீர்வு காண்பது என்பது இயலாத காரியம்.

தேவைப்பட்டால் இரு நாடுகளுக்கு இடையே சமரச பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்கவோ, அல்லது தன்னால் முடிந்த உதவிகளை செய்யவோ தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

காஷ்மீர் விவகாரத்தில் ஏற்கனவே சமரசம் செய்ய தயார் என்று டிரம்ப் அறிவித்து இருந்தார். இதை இந்தியா நிராகரித்து இருந்தது. தற்போது அவர் மீண்டும் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக கூறியுள்ளார். இந்தியாவின் உள்விவகாரத்தில் அமெரிக்கா தலையீட விரும்பவில்லை என்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.
Tags:    

Similar News