செய்திகள்
ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி லேம்

பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருகிறோம்: ஹாங்காங் நிர்வாக தலைவர்

Published On 2019-08-20 11:36 GMT   |   Update On 2019-08-20 11:36 GMT
போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராகி வருவதாக ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி லேம் தெரிவித்துள்ளார்.
ஹாங்காங்:

ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது. 

இதை எதிர்த்து மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி லேம் சட்ட திருத்த மசோதா நிறுத்தி வைப்பதாக  அறிவித்தார். ஆனால் சட்ட திருத்த மசோதாவை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும், போராட்டக்காரர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்ககூடாது என வலியுறுத்தி இரண்டு மாதங்களுக்கு மேலாக மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

போராட்டக்காரர்களை தடுக்கும் நடவடிக்கையில் உள்ளூர் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறிவருகிறது.



இதற்கிடையில், ஹாங்காங் போராட்டத்தின் ஒருபகுதியாக கடந்த ஞாயிறுக்கிழமை (ஆகஸ்ட் 18) அந்நகரின் விக்டோரியா பூங்காவில் கொட்டும் மழையிலும்  சுமார் 17 லட்சம் பேர் திரண்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் உலக அளவில் பல்வேறு நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட உலக தலைவர்கள் ஹாங்காங் போராட்டம் குறித்து தங்கள் கவலையை தெரிவித்தனர்.

இந்நிலையில், ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி லேம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நானும் எனது அரசு அதிகாரிகளும் போராட்டகாரர்களை நேரடியாக சந்தித்து பேச முயற்சி மேற்கொண்டு வருகிறோம். அரசியலுக்கு அப்பாற்பட்டு போராட்டகாரர்கள் அரசுக்கு உரிய மரியாதையும், இந்த பிரச்சனை குறித்த புரிதலுடனும் செயல்பட வேண்டும். ஆனால் பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதமான சிக்கல்களை சமாளிக்க அரசு எந்தவிதமான நடவடிக்கைகளையும் தைரியமாக மேற்கொள்ளும்.   

மேலும், போராட்டக்காரர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்ட போலீசார் குறித்து விசாரணை மேற்கொள்ள தனிக்குழு ஒன்று அமைக்கப்பட்டு 6 மாதத்துக்குள் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

இந்த சமயத்தில் ஹாங்காங்கில் அமைதியை நிலைநாட்ட இது மிகவும் பொறுப்பான பதில் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில், ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி லேம்-ன் அறிக்கை போராட்டக்காரர்களை சிக்கவைக்க விரிக்கப்பட்ட ஒரு வலை என போராட்டக்குழு ஒருங்கினைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். 
Tags:    

Similar News