செய்திகள்
பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மக்மூது குரேஷி

காஷ்மீர் விவகாரத்தில் ‘நமக்கு முஸ்லிம் நாடுகள் கூட ஆதரவு தரவில்லையே’ - பாகிஸ்தான் மந்திரி புலம்பல்

Published On 2019-08-13 22:44 GMT   |   Update On 2019-08-13 22:44 GMT
காஷ்மீர் விவகாரத்தில் நமக்கு முஸ்லிம் நாடுகள் கூட ஆதரவு தரவில்லையே என பாகிஸ்தான் மந்திரி ஷா மக்மூது குரேஷி தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்:

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த விவகாரத்தில் சர்வதேச நாடுகளிடம் இந்தியாவின் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மக்மூது குரேஷி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபராபாத்தில் நேற்று நிருபர்களிடம் பேசினார். அவர் காஷ்மீர் விவகாரம் பற்றி புலம்பித்தள்ளி விட்டார்.

அப்போது அவர் கூறும்போது, “நீங்கள் (மக்கள்) முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழக்கூடாது. கைகளில் மாலையோடு உங்களுக்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் யாரும் காத்திருக்க மாட்டார்கள்” என குறிப்பிட்டார்.

முஸ்லிம் நாடுகள் கூட பாகிஸ்தானை ஆதரிக்கவில்லை என்பதை அவர் சூசகமாக சுட்டிக்காட்டினார்.

இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “அந்த நாடுகள் தங்கள் பொருளாதார நலன்களுக்காக காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானை ஆதரிக்க மாட்டார்கள். உலகின் பல்வேறு நாடுகளுக்கும் அவர்களுக்கென்று பொருளாதார நலன்கள் உண்டு. இந்தியா 100 கோடிக்கு மேற்பட்ட மக்களின் சந்தை. ஏராளமானோர் அங்கு (இந்தியா) முதலீடு செய்துள்ளனர். இஸ்லாம் காப்பாளர்களும் இந்தியாவில் முதலீடு செய்துள்ளனர். அவர்கள் சொந்த நலன்தான் அவர்களுக்கு முக்கியமாக போய்விட்டது” என்று கூறினார்.
Tags:    

Similar News