செய்திகள்
அமெரிக்கா அதிபர் டொனல்ட் டிரம்ப்

வர்த்தகப்போர் விவகாரம் - அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய விரும்பும் சீனா

Published On 2019-08-10 06:32 GMT   |   Update On 2019-08-10 06:32 GMT
அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் காரணமாக சீன பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் சீனா இவ்விவகாரத்தில் ஒப்பந்தம் ஏற்படுத்த விரும்புகிறது.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் சீனப் பொருட்கள் குவிந்ததுடன் விலையும் மலிவாக கிடைப்பதால் அமெரிக்க பொருட்களின் வர்த்தகம் சரிந்தது. இது அமெரிக்க அதிபர் டிரம்பின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஏற்கனவே, அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற கொள்கையை கடைப்பிடித்து வரும் டிரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 250 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களுக்கு முன்பு இருந்ததை விட கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்தார். 

அதன்பின்னர் மேலும் சுமார் 300 பில்லியன் டாலர் மதிப்புள்ள சீனப் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 10 சதவீதம் உயர்த்தினார். இந்த வரிவிதிப்பை வரும் செப்டம்பர் மாதம் 1 ந் தேதி முதல் அமல்படுத்த முடிவு செய்துள்ளார். இது சீனாவின் வர்த்தகத்தை கடுமையாக பாதித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவும், அமெரிக்க பொருட்கள் மீதான இறக்குமதி வரியை உயர்த்தியது. இதனால் வர்த்தகப் போர் முற்றியது. 

இந்த வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வந்து, வர்த்தக ஒப்பந்தம் நடத்தும் முயற்சியில் இரு நாட்டு தலைவர்களும் ஈடுபட்டனர். இதற்கான பேச்சுவார்த்தை கடந்த நவம்பரில் தொடங்கியது. ஆனாலும் பேச்சுவார்த்தைகள் எந்த பலனையும் தரவில்லை.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், “கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு சீனாவின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. ஆயிரக்கணக்கான நிறுவனங்கள்  சீனாவை விட்டு வெளியேறும் நிலையில் உள்ளன. இதனால் இவ்விவகாரத்தில் சீனா அமெரிக்காவுடன் ஒப்பந்ததை ஏற்படுத்த விரும்புகிறது. ஆனால் ஒப்பந்தம் ஏற்படுத்த நான் தயாராக இல்லை” என தெரிவித்தார்.

Tags:    

Similar News