செய்திகள்
வெடி விபத்து நடந்த விமானப்படை தளம்

சிரியா விமானப்படை தளத்தில் வெடிவிபத்து: 12 வீரர்கள் பலி

Published On 2019-08-03 15:24 GMT   |   Update On 2019-08-03 15:24 GMT
சிரியாவில் விமானப்படை தளத்தில் இருந்த காலாவதியான ஆயுதங்களை அப்புறப்படுத்தும் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 12 ராணுவ வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர்.
டமாஸ்கஸ்:

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்தின் ஆதரவு அரசுப் படைகளுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 7 வருடங்களாக அரசுப் படைகளுக்கும், கிளர்ச்சி படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில், லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

கிளர்ச்சியாளர்களை ஒடுக்கும் பணியில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும், சிரியா அரசுக்கு ஆதரவாக ரஷ்ய படைகளும் வான் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. இதில் கிளர்ச்சியாளர்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.

கிளர்ச்சியாளர்களை வான்வெளி தாக்குதல் மூலம் ஒடுக்கும் பணியில் சிரியாவின் ஹாம்ஸ் பகுதியில் உள்ள ஷய்ரா ராணுவ விமானப்படை தளம் பெரிதும் பயன்பட்டு வருகிறது. இங்கு தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் மற்றும் பல்வேறு ஆயுதங்கள் அதிகமாக சேமித்து வைக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், அந்த விமானப்படை தளத்தில் இன்று காலாவதியான வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை அகற்றும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக வெடிமருந்துகள் நிரம்பிய பொருட்கள் வெடித்து சிதறின. இதில் 12 வீரர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து காயமடைந்த வீரர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News