செய்திகள்
நிலநடுக்கத்தில் சேதமான வீடு

பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 8 பேர் பலி

Published On 2019-07-27 03:26 GMT   |   Update On 2019-07-27 08:39 GMT
பிலிப்பைன்சில் இன்று காலை அடுத்தடுத்து ஏற்பட்ட இரு நிலநடுக்கங்களால் 8 பேர் பலியாகினர்.
மணிலா:

பிலிப்பைன்ஸ் நாட்டில் லூசான் தீவில் இன்று அதிகாலை 4.15 மணியளவில் அடுத்தடுத்து 2 தடவை நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள படான்ஸ் மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் அதன் அருகேயுள்ள மற்ற தீவுகளிலும் எதிரொலித்தது.

இதன் காரணமாக லூசான் உள்பட பல தீவுகள் அதிர்ந்தன. இதனால் அங்குள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. அப்போது மக்கள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். இதனால் பதறியடித்து எழுந்த அவர்கள் வீடுகளில் இருந்து வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர்.

இந்த நிலநடுக்கத்தில் வீடுகள் இடிந்ததில் இடிபாடுகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். 60 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து வந்தனர். இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதனால் பலி மற்றும் காயம் அடைந்தோர் எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

இன்று 5.4 ரிக்டர் மற்றும் 5.9 ரிக்டர் என்ற அளவுகளில் 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. முதல் நிலநடுக்கம் அதிகாலை 4.15 மணிக்கும், அடுத்த நிலநடுக்கம் சில மணிநேரங்களிலும் உருவானது.

பிலிப்பைன்ஸ் பசிபிக் கடல் பிராந்தியத்தில் பூகம்பம் ஆபத்து பகுதியில் உள்ளது. எனவே இங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. கடந்த ஏப்ரலில் 6.3 ரிக்டரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.

Tags:    

Similar News