செய்திகள்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு கவனம் தேவை - இம்ரான்கான் அறிவுறுத்தல்

Published On 2019-07-24 20:07 GMT   |   Update On 2019-07-24 20:07 GMT
ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா கவனத்துடன் செயல்பட வேண்டுமென இம்ரான்கான் அறிவுறுத்தி உள்ளார்.
வாஷிங்டன்:

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்காவில் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். கடந்த திங்கட்கிழமை வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்பை சந்தித்து, இரு தரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தால் வாஷிங்டன் நகரில் நிறுவப்பட்டுள்ள அமைதிக்கான நிறுவனத்துக்கு இம்ரான்கான் சென்றார். அங்கு திரண்டிருந்த பத்திரிகையாளர்கள் ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் விவகாரங்கள் குறித்து இம்ரான்கானிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து இம்ரான்கான் பேசியதாவது:-

அமெரிக்கா-ஈரான் விவகாரத்தில் எனக்கு மிகுந்த கவலை உள்ளது. ஒருவேளை ஈரானுடன் போர் ஏற்பட்டால் அதனால் ஏற்படும் மோசமான நிலைமையை அனைத்து நாடுகளும் உணர்ந்துள்ளனவா என்பது குறித்து எனக்கு உறுதியாக தெரியவில்லை.

உங்களுக்கு தெரியுமா, இது 2003-ம் ஆண்டில் ஈராக் மீது அமெரிக்க படையெடுத்து போன்று இருக்காது. அதை விட மிக, மிக மோசமாக இருக்கலாம். இது பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிடக்கூடும். மக்கள் அல் கொய்தாவை மறந்துவிடுவார்கள்.

ஒருவேளை போர் தொடங்கினால். அது குறுகியகாலத்திலேயே முடிந்துவிடும். ஆனால் அதற்கு பின் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை பெரும்பாலான மக்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதே எனது கவலை.

எனவே இன்னொரு ராணுவ தாக்குதல் கூடாது என்பதை மிகவும் தீவிரமாக வற்புறுத்துகிறேன். ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா கவனத்துடன் செயல்படவேண்டும்.

இரு தரப்பு பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதில் பாகிஸ்தானின் பங்கு இருக்குமாயின், எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறோம். இதை ஈரானிடம் ஏற்கனவே அழுத்தமாக சொல்லியிருக்கிறோம்.

சமீபகாலத்துக்கு முன்பு வரை ஈரான் அதற்கு தயாராக இருந்தது. ஆனால் தற்போது அந்தநாடு மிகுந்த அவநம்பிக்கையை அடைந்திருப்பதாக நான் உணர்கிறேன். இது போருக்கு வழிவகுக்கும்.

ஆப்கானிஸ்தானின் உள் விவகாரங்களில் நாங்கள் ஒருபோதும் தலையிடமாட்டோம். தங்களுக்கு என்ன வேண்டும் ஆப்கானிஸ்தானியர்களே தீர்மானிக்கட்டும்.

இப்போது, நாம் அனைவரும் ஒரே பக்கத்தில் இருக்கிறோம். அதிர்ஷ்டவசமாக, இப்போது அமெரிக்காவும் அதே பக்கத்தில் உள்ளது. நாம் அனைவரும் அமைதியையே விரும்புகிறோம். போரை அல்ல.

இவ்வாறு அவர் பேசினார். 
Tags:    

Similar News