செய்திகள்
பிரதமர் இல்லம் முன்னர் போரிஸ் ஜான்சன் உரையாற்றும் காட்சி

பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமராக பதவி ஏற்றார் போரிஸ் ஜான்சன்: மோடி வாழ்த்து

Published On 2019-07-24 15:27 GMT   |   Update On 2019-07-24 15:33 GMT
தெரசா மே ராஜினாமாவை தொடர்ந்து பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் இன்று பதவி ஏற்றார் .

லண்டன்:

தெரசா மே ராஜினாமாவை தொடர்ந்து  பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் இன்று
பதவி ஏற்றார் .

பிரிட்டன் நாட்டின் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற போரிஸ் ஜான்சன் அந்நாட்டின் புதிய பிரதமராக இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.



முன்னதாக, பக்கிங்காம் அரண்மனையில் அந்நாட்டு அரசி இரண்டாம் எலிசபத்தை போரிஸ் ஜான்சன் சந்தித்தார். புதிய அரசுக்கு தலைமை தாங்குமாறு அவரை இரண்டாம் எலிசபத் கேட்டுக் கொண்டார்.

இதைதொடர்ந்து, பிரிட்டன் புதிய பிரதமராக (இந்திய நேரப்படி) இன்றிரவு பதவியேற்ற போரிஸ் ஜான்சன் லண்டன் நகரில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான ‘நம்பர் 10, டவுனிங் ஸ்ட்ரீட்’ அருகே பொதுமக்களிடையே எழுச்சி உரையாற்றினார்.



ஜனநாயகத்தின் வீடான நமது நாட்டில் ‘ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும்’ என கடந்த 2016-ம் ஆண்டில் பொது வாக்கெடுப்பின் மூலம் மக்கள் அளித்த தீர்ப்பை, நமது மக்களின் விருப்பத்தை மூன்றாண்டு காலமாக நிறைவேற்ற சக்தியற்றவர்களாக நாம் இதுவரை இருந்து விட்டோம்.

ஐரோப்பிய யூனியன் அளித்த இறுதிக்கெடுவான அக்டோபர் 31-ம் தேதி வரை காத்திருக்காமல் வெகு விரைவில் ‘பிரெக்சிட்’ நடவடிக்கைகளை நிறைவேற்றி முடிப்பேன்.

பிரிட்டனை சிறப்பாக மாற்றுவதற்கும், வலிமையான தலைமையை அளிக்கவும், முக்கிய முடிவுகளை எடுக்கவும் உரிய நேரம் வந்து விட்டது என பிரதமராக பதவியேற்ற பின்னர் போரிஸ் ஜான்சன் ஆற்றிய தனது முதல் உரையின்போது குறிப்பிட்டார்.

புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள போரிஸ் ஜான்சனுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News