செய்திகள்
டொனால்ட் டிரம்ப்

பாகிஸ்தான் ராணுவத்திற்கு வழங்கிய நிதி உதவியை நிறுத்தியது அமெரிக்கா

Published On 2019-07-20 10:13 GMT   |   Update On 2019-07-20 10:50 GMT
பயங்கரவாதிகளை தொடர்ந்து ஆதரிப்பதால் பாகிஸ்தான் ராணுவத்துக்கு அமெரிக்கா வழங்கும் நிதி உதவி தொடர்ந்து நிறுத்தி வைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

வாஷிங்டன்:

கடந்த 2017-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றார். அதில் இருந்து அமெரிக்காவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறது என கூறி பாகிஸ்தானுக்கு அளித்து வந்த பாதுகாப்பு நிதி உதவியை அமெரிக்கா முற்றிலும் நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் பாராளுமன்ற ஆய்வு சேவை மையம் என்ற தன்னாட்சி அமைப்பு சமீபத்தில் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

அதில், பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. பயங்கரவாதிகளின் சொர்க்க புரியாக அந்நாடு திகழ்கிறது. அண்டை நாடுகளில் தாக்குதல் நடத்தும் லஷ்கர்-இ-தொய்பா, அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக உதவி செய்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்ற பிறகு இம்ரான் கான் முதன் முறையாக அமெரிக்கா சென்று அதிபர் டொனால்டு டிரம்பை சந்திக்க உள்ளார். அப்போது அமெரிக்கா நிறுத்திவைத்துள்ள நிதி உதவியை மீண்டும் வழங்கும்படி கோரிக்கை விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பாராளுமன்ற ஆய்வு சேவை மையத்தின் இந்த அறிக்கை பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக இந்த அமைப்பின் அறிக்கை அடிப்படையில்தான் வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் நிதிஉதவி வழங்குவதற்கு அனுமதி அளிப்பார்கள். தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த அறிக்கையால் பாகிஸ்தான் ராணுவத்துக்கு அமெரிக்கா வழங்கும் நிதி உதவி தொடர்ந்து நிறுத்தி வைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News