செய்திகள்
சிறிசேனா

இலங்கையில் ஈஸ்டர் தின தாக்குதலில் கைது செய்யப்பட்டவர்களுக்கு தூக்கு - சிறிசேனா வலியுறுத்தல்

Published On 2019-07-17 15:17 GMT   |   Update On 2019-07-17 15:17 GMT
இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட அனைவரும் தூக்கிலிடப்பட வேண்டும் என அதிபர் சிறிசேனா வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் கடந்த 1976–ம் ஆண்டு முதல் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் மரண தண்டனை விதிக்க அதிபர் சிறிசேனா முடிவு செய்தார். அதன்படி போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 4 பேருக்கு தூக்கு தண்டனை கடந்த மாதம் உறுதி செய்யப்பட்டது. ஆனால் அதிபரின் இந்த முடிவை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தியது. மரண தண்டனைக்கு எதிரான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு,  4 பேருக்கும் அக்டோபர் 30–ந்தேதி வரை தண்டனையை நிறைவேற்றக்கூடாது எனக் கூறியது. இதற்கிடையே இலங்கையில் மரண தண்டனையை மீண்டும் கொண்டு வரும் அதிபரின் முடிவுக்கு ஆளும் கூட்டணியிலும் எதிர்ப்பு கிளம்பியது.  

இந்த நிலையில் இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தி சுமார் 260 பேரை கொன்று குவித்த பயங்கரவாதிகள் அனைவரும் தூக்கிலிடப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.  ஒரு நல்ல சமூகத்தை உருவாக்க வேண்டுமென்றால் தண்டனைகள் அவசியம். தண்டனைகள் குறித்த அச்சத்தினால்தான், சமூகத்தில் தவறுகள் குறையும். இதன் மூலம் ஒரு சிறந்த சமூகமும், நாடும் உருவாகும். இலங்கையின் குற்றவியல் சட்டப்படி கொலை குற்றவாளிகள், அரசுக்கு எதிராக ராணுவ புரட்சியில் ஈடுபடுவோர், பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும். 

ஆனால் மரண தண்டனையை ஒழிப்பதற்காக சில எம்.பி.க்கள் எடுத்துவரும் நடவடிக்கைகளால் மேற்படி குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது தடுக்கப்படும். சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்கள்தான் இலங்கையில் ஈஸ்டர் தின தாக்குதல்களை ஒருங்கிணைத்து நடத்தி உள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட அனைவரும் தூக்கிலிடப்பட வேண்டும் என சிறிசேனா வலியுறுத்தியுள்ளார்.
Tags:    

Similar News