செய்திகள்
ஈரான் அதிபர் ஹசன் ருஹானி

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் - ஈரான் அதிபர் தகவல்

Published On 2019-07-15 18:40 GMT   |   Update On 2019-07-15 18:40 GMT
ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்கினால் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என அந்நாட்டின் அதிபர் ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார்.
டெஹ்ரான்:

அணு ஆயுத பரவலை தடுக்கும் விதமாக ஈரானுடன் வல்லரசு நாடுகள் ஏற்படுத்திக்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த மே மாதம் வெளியேறியது. அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் போக்குக்கு வித்திட்டது. ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. அதற்கு பதிலடியாக அணுசக்தி ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை மீறி செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் கையிருப்பை ஈரான் அதிகரித்தது. இருநாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து மோதல் போக்கு நீடிப்பதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் நிலவுகிறது. இருநாடுகளும் பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. அமெரிக்காவும் பேச்சுவார்த்தைக்கான கதவு திறந்தே இருப்பதாக கூறிவருகிறது.

இந்த நிலையில் ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்கினால் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என அந்நாட்டின் அதிபர் ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது இதுகுறித்து அவர் கூறுகையில், “நாங்கள் எப்போதும் பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கை கொண்டுள்ளோம். அவர்கள்(அமெரிக்கா) பொருளாதார தடைகளை நீக்கி, திணிக்கப்பட்ட பொருளாதார அழுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து ஒப்பந்தத்திற்கு திரும்பினால், இன்றே, இப்போதே, எங்கு வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்” என அவர் கூறினார். 
Tags:    

Similar News