செய்திகள்
தேடுதல் வேட்டை

சோமாலியா நாட்டில் அரசுப் படைகள் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்

Published On 2019-07-14 12:57 GMT   |   Update On 2019-07-14 12:57 GMT
சோமாலியா நாட்டின் தெற்கு பகுதியில் அரசுப் படைகள் தாக்குதலில் அல் ஷபாப் பயங்கரவாதிகள் 15 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் பிடியில் இருந்த 3 கிராமங்கள் மீட்கப்பட்டன.
மொகடிஷு:
 
சோமாலியா நாட்டின் பல பகுதிகளில் அல் கொய்தா ஆதரவு பெற்ற உள்நாட்டு தீவிரவாதிகளான அல் ஷபாப் குழுக்கள் ஏராளமாக இயங்கி வருகின்றன. சோமாலியா அரசை கவிழ்த்துவிட்டு மிகவும் கண்டிப்பு நிறைந்த இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையிலான ஆட்சியை நிறுவ வேண்டும் என்பது இவர்களின் நோக்கமாக உள்ளது.

உள்நாட்டு ராணுவ வீரர்கள் மீது அவ்வப்போது அதிரடியாக தாக்குதல் நடத்திவரும் இந்த பயங்கரவாதிகள் மத்திய ஆப்பிரிக்காவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் பன்னாட்டு அமைதிப் படையினரையும் கொன்று குவிக்கின்றனர். மேலும், வெளிநாட்டினர் வந்து செல்லும் உணவகங்களை குறிவைத்தும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சோமாலியாவின் தெற்கு பகுதியில் உள்ள கிஸ்மாயோ நகரில் உள்ள பிரபல ஓட்டலின் மீது பயங்கரவாதிகள் சமீபத்தில் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர்.

இதற்கு பதிலடி தரும் வகையில் அந்நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள வான்லேவேய்ன் நகரின் அருகே அல் ஷபாப் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த கிராமப்பகுதிகளை நேற்று ஏராளமான ராணுவத்தினர் முற்றுகையிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது இருதரப்பினருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 15 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தில் சிக்கியிருந்த யாக் புராவேய்னே, மடா மரோடி, இடோவ் ஜலாட் ஆகிய கிராமங்களையும் அரசுப் படைகள் மீட்டதாக சோமாலியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
Tags:    

Similar News