செய்திகள்
இங்கிலாந்து நாட்டின் எண்ணெய் கப்பல்

இங்கிலாந்து கப்பலை ஈரான் கைப்பற்ற முயற்சியா? - அமெரிக்கா தகவலால் பரபரப்பு

Published On 2019-07-11 19:47 GMT   |   Update On 2019-07-11 19:47 GMT
இங்கிலாந்து எண்ணெய் கப்பல்களை ஈரான் ராணுவ படகுகள் கைப்பற்ற முயற்சித்ததாக அமெரிக்கா வெளியிட்ட தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.
டெஹ்ரான்:

இங்கிலாந்து நாட்டின் எண்ணெய் கப்பல் பிரிட்டிஷ் ஹெரிட்டேஜ். இந்த கப்பல் பாரசீக வளைகுடா பகுதியில், ஹோர்முஜ் ஜலசந்தி வழியாக சென்றபோது, அதை ஈரான் ராணுவத்துக்கு சொந்தமான 5 படகுகள் கைப்பற்ற முயற்சி செய்தன என்று அமெரிக்க ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

ஏற்கனவே பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் கடந்த மே மாதத்தில் இருந்து வெளிநாட்டு எண்ணெய் கப்பல்களை ஈரான் தாக்கியதாக அமெரிக்கா குற்றம் சாட்டிய நிலையில், இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் இங்கிலாந்து எண்ணெய் கப்பல்களை தங்கள் ராணுவ படகுகள் கைப்பற்ற முயற்சித்ததாக வெளியாகி உள்ள செய்தியை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இதையொட்டி ஈரான் வெளியுறவு மந்திரி ஜாவத் ஷெரீப் கூறுகையில், “அவர்கள் (அமெரிக்கா) அப்படி சொல்வதின் நோக்கம், பதற்றத்தை அதிகரிக்கச்செய்ய வேண்டும் என்பதுதான். இந்த குற்றச்சாட்டுகள் தவறானவை. ஆதாரமற்றவை” என குறிப்பிட்டார். இதே போன்று ஈரான் ராணுவமும் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தங்கள் படகுகள் எந்த வெளிநாட்டு கப்பல் மீதும் தாக்குதல் நடத்தவில்லை என்று அது கூறி உள்ளது.
Tags:    

Similar News