செய்திகள்
காவல்துறை புஜித் ஜெயசுன்டேரா, முன்னாள் செயலாளர் ஹேமாசிறி பெர்னான்டோ

இலங்கையின் முன்னாள் காவல்துறை தலைவர், பாதுகாப்புத்துறை செயலாளர் ஜாமீனில் விடுதலை

Published On 2019-07-09 11:47 GMT   |   Update On 2019-07-09 11:47 GMT
கொழும்புவில் ஈஸ்டர் தொடர் வெடிகுண்டு தாக்குதலை தடுக்க தவறியதாக கைதான காவல்துறை முன்னாள் தலைவர், பாதுகாப்புத்துறை முன்னாள் செயலாளர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
கொழும்பு:

இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஏப்ரல் மாதம் 21-ம் தேதி ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனையின்போது 3 தேவாலயங்கள், 4 ஓட்டல்கள் மற்றும் ஒரு குடியிருப்பு பகுதியில் அடுத்தடுத்து 8 இடங்களில் குண்டுகள் வெடித்தன.

இந்த தாக்குதல்களில் இந்தியர்கள் உள்பட 258 பேர் உயிரிழந்தனர். 400-க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு காரணமான தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 பயங்கரவாத இயக்கங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்தது.

கொழும்புவில் இதுபோன்ற தாக்குதல் நடக்கலாம் என இந்தியா முன்கூட்டியே உளவுத்தகவல் அளித்திருந்தும் இந்த தாக்குதலை தடுக்கும் வகையில் செயலாற்ற தவறிய பாதுகாப்புத்துறை செயலாளர் ஹேமாசிறி பெர்னான்டோ, காவல்துறை தலைவர் புஜித் ஜெயசுன்டேரா உள்பட பல அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.



இச்சம்பவம் தொடர்பாக பெண்கள் உள்பட சுமார் 100 பேர் கைது செய்து விசாரணை காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். விசா காலம் முடிந்தும் இலங்கையில் தங்கி இருந்த சுமார் 200 இஸ்லாமிய போதகர்கள் உள்பட 600 வெளிநாட்டினர் வெளியேற்றப்பட்டனர்.

இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி விஜித் மலால்கோடா தலைமையில் முன்னாள் போலீஸ் ஐ.ஜி. என்.கே.இலங்கக்கூன், சட்டம்-ஒழுங்கு அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜெயமன்னே ஆகியோரை கொண்ட சிறப்பு குழுவை  அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா அமைத்துள்ளார்.

இந்த குழுவினர் விரிவான விசாரணை நடத்தி அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் பங்கேற்க வருமாறு முன்னாள் காவல்துறை தலைவர் புஜித் ஜெயசுன்டேராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

ஆனால், உடல்நிலை சரியில்லை என்று கூறி போலீஸ் மருத்துவமனையில் அவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். கடந்த இரண்டாம் தேதி அந்த மருத்துவமனைக்கு சென்ற சி.ஐ.டி. அதிகாரிகள் அவரிடம் சிறிது நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்தனர்.

இதேபோல் கொழும்புவில் உள்ள தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பாதுகாப்புத்துறை செயலாளர் ஹேமாசிறி பெர்னான்டோவும் அன்றைய தினமே கைது செய்யப்பட்டார்.

பின்னர், சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள் இருவரும் ஜாமீனில் தங்களை விடுதலை செய்யுமாறு கொழும்பு நகரில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் கொழும்பு நகர தலைமை மாஜிஸ்திரேட் லன்கா ஜெயரத்னே முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து முன்னதாக எவ்வித வாக்குமூலத்தையும் பெறாமல் அவர்களை சிறையில் அடைத்து வைத்திருப்பதற்காகவும் அவர்கள் மீது கொலை குற்றத்தின்கீழ் தண்டிக்க எந்த ஆதாரத்தையும் தாக்கல் செய்யாததற்காகவும் போலீசாருக்கு  மாஜிஸ்திரேட் லன்கா ஜெயரத்னே கண்டனம் தெரிவித்தார்.

அதிபரால் நியமிக்கப்பட்ட விசாரணை கமிஷனின் உத்தரவுக்காகவும் போலீசாரையோ, மற்ற யாரையும் திருப்திப்படுத்துவதற்காகவும் இவர்கள் தொடர்ந்து சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை இந்த நீதிமன்றத்தால் அனுமதிக்க முடியாது எனவும் குறிப்பிட்ட மாஜிஸ்திரேட், காவல்துறை முன்னாள் தலைவர் புஜித் ஜெயசுன்டேரா மற்றும்  பாதுகாப்புத்துறை முன்னாள் செயலாளர் ஹேமாசிறி பெர்னான்டோ ஆகியோரை தலா 5 லட்சம் ரூபாய் பிணைத்தொகையில் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
Tags:    

Similar News