செய்திகள்
போயிங் 737 மேக்ஸ் ரக விமானம்

விமான விபத்துகளில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவ ரூ.700 கோடி - போயிங் நிறுவனம் அறிவிப்பு

Published On 2019-07-04 20:12 GMT   |   Update On 2019-07-04 20:12 GMT
போயிங் நிறுவனம் தனது 737 மேக்ஸ் ரக விமான விபத்தில் உயிர் இழந்தோரின் குடும்பத்துக்கு உதவ 100 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.688 கோடி) ஒதுக்கீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
வாஷிங்டன்:

உலகின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் நிறுவனம் தயாரித்த ‘737 மேக்ஸ்’ ரக விமானம் தொடர்ந்து 5 மாத இடைவெளியில் அடுத்தடுத்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 346 பேரும் பலியாகினர்.

அதனை தொடர்ந்து உலகம் முழுவதும் பல நாடுகளின் விமான நிறுவனங்கள் ‘737 மேக்ஸ்’ விமான பயன்பாட்டை நிறுத்திவிட்டன. இந்த விபத்துகளில் உயிர் இழந்தோரின் குடும்பத்தினர் பலர் போயிங் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் போயிங் நிறுவனம் தனது 737 மேக்ஸ் ரக விமான விபத்தில் உயிர் இழந்தோரின் குடும்பத்துக்கு உதவ 100 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.688 கோடி) ஒதுக்கீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இந்த நிதி வங்கியில் முதலீடு செய்யப்பட்டு அதில் இருந்து கிடைக்கும் தொகையில் உயிர் இழந்தோர் குடும்பத்தினரின் கல்வி, உள்ளிட்ட பல செலவுகளுக்கு தேவையான இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் சார்பில் வாதாடும் வக்கீல்கள் போயிங் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையை நிராகரித்து உள்ளனர்.

இதுகுறித்து வக்கீல் ஒருவர் கூறுகையில், “விபத்தில் உயிர் இழந்தோரின் குடும்பத்தினர் பண தேவைக்காக மட்டும் வழக்கு தொடரவில்லை என்பதை போயிங் நிறுவனம் புரிந்து கொள்ளவில்லை. இதுபோல் இன்னொரு விபத்து நடைபெறாத அளவு போயிங் தனது பாதுகாப்பு சாதனங்களை மேம்படுத்த வேண்டும் என்பதும் அவர்கள் கேட்கும் ஒன்றாகும்” என கூறினார். 
Tags:    

Similar News