செய்திகள்
விஜய் மல்லையா

பழிவாங்கும் வேட்டையால் பாதிக்கப்பட்டேன் - விஜய் மல்லையா குமுறல்

Published On 2019-07-03 20:07 GMT   |   Update On 2019-07-03 20:07 GMT
நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதி பெற்ற விஜய் மல்லையா, பழிவாங்கும் வேட்டையால் பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
லண்டன்:

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தவில்லை. திடீரென லண்டனுக்கு தப்பி சென்று விட்டார்.

அவருக்கு எதிராக சர்வதேச போலீஸ் மூலம் வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. லண்டனில் அவர் கைது செய்யப்பட்டபோதிலும், ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிடக்கோரி, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இந்தியா சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதை ஏற்று அவரை நாடு கடத்த கடந்த டிசம்பர் மாதம் மாஜிஸ்திரேட்டு எம்மா அர்புத்நாட் உத்தரவிட்டார். இங்கிலாந்து உள்துறை மந்திரியும் இதற்கு ஒப்புதல் அளித்தார்.

இதற்கிடையே, இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி, இங்கிலாந்து ஐகோர்ட்டில் விஜய் மல்லையா மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது நேற்று முன்தினம் 4 மணி நேரம் விவாதம் நடைபெற்றது. மல்லையா சார்பில் ஆஜரான வக்கீல் கிளேர் மான்ட்கோமெரி, தனது வாதத்தில் 5 அம்சங்கள் அடிப்படையில், மேல்முறையீடு செய்ய அனுமதி கோரினார்.

1. முதல் நோக்கிலேயே குற்றம் காணக்கூடிய வழக்கு அல்ல, 2. இந்தியாவில் உள்ள சிறைகளின் நிலைமை உகந்ததாக இல்லை, 3. குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை, 4. நேர்மையான விசாரணை நடக்க வாய்ப்பில்லை, 5. நாடு கடத்தப்படும் வழக்கை தவிர்த்து, இதர வழக்குகளிலும் அவர் சிக்க வைக்கப்படக்கூடும் ஆகிய 5 அம்சங்கள் அடிப்படையில் அவர் மேல்முறையீட்டுக்கு அனுமதி கோரினார்.

இறுதியில், முதல் நோக்கிலேயே குற்றம் காணக்கூடிய வழக்கு அல்ல என்ற அம்சத்தை மட்டும் நீதிபதி ஜார்ஜ் லெக்கட் ஏற்றுக்கொண்டார். அதன் அடிப்படையில், மேல்முறையீடு செய்ய அவர் அனுமதி அளித்தார். மற்ற அம்சங்களை அவர் நிராகரித்தார். இந்த விசாரணையின்போது, இந்திய அரசு சார்பில் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், வக்கீல் யாரும் ஆஜராகவில்லை. இந்த தீர்ப்பு இந்தியாவுக்கு பலத்த பின்னடைவாக கருதப்படுகிறது.

இதையடுத்து, இன்னும் 4 முதல் 6 வாரங்களில், விஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு, இங்கிலாந்து ஐகோர்ட்டில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த விசாரணையில், விஜய் மல்லையா வெற்றி பெற்றால், அவர் இந்த வழக்குகளில் இருந்து விடுவிக்கப்படுவார். ஒருவேளை தோல்வி அடைந்தால், அவர் இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட்டை அணுக வாய்ப்புள்ளது. சுப்ரீம் கோர்ட்டு விசாரணை, எப்படியும் ஓராண்டுக்கு மேல் நீடிக்கும். ஐகோர்ட்டில் விஜய் மல்லையாவுக்கு சாதகமான தீர்ப்பு வந்தால், இந்திய அரசு, இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட்டை நாடும். எனவே, இந்த வழக்கு இழுத்துக்கொண்டே செல்லக்கூடும் என்று தெரிகிறது.

இதற்கிடையே, மேல்முறையீட்டுக்கு அனுமதி கிடைத்திருப்பதால், மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்து வரும் விஜய் மல்லையா, தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

இத்தனை ஆண்டுகளாக என்னை கேலி செய்து கொண்டிருந்தவர்களை கேட்கிறேன், இந்த தீர்ப்பை பாருங்கள். முதல் நோக்கிலேயே குற்றம் காண முடியாது என்று கூறப்பட்டுள்ளது. பொய் வழக்கு அடிப்படையில், எனக்கு எதிராக பழிவாங்குதல் வேட்டை நடந்தது. அதில் பாதிக்கப்பட்டேன். இந்த நல்ல தீர்ப்புக்கு பிறகும், வங்கிகளிடம் பெற்ற கடனை திருப்பித்தர தயாராக இருக்கிறேன். பணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். மீதி பணத்தை ஊழியர்களுக்கும், இதர கடன்தாரர்களுக்கும் கொடுத்து விட்டு, வாழ்க்கையை தொடருவேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News