செய்திகள்

கூகுள் மேப் காட்டிய தவறான குறுக்குப் பாதை.. ஒரே இடத்தில் குவிந்த 100 கார்கள்

Published On 2019-06-28 03:56 GMT   |   Update On 2019-06-28 03:56 GMT
அமெரிக்காவில் கூகுள் மேப் காட்டிய குறுக்குப் பாதையில் சென்ற 100 கார்கள், ஒரே இடத்தில் தவறான வழியில் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது.
வாஷிங்டன்:

முன்பெல்லாம் புதிதாக ஓரிடத்திற்கு சென்றால், கையில் துண்டுச் சீட்டுகள் வைத்துக் கொண்டு, எந்த இடத்திற்கு சென்றோமோ அங்கு இருப்பவரிடமோ, அல்லது அங்கு கடை வைத்திருப்பவரிடமோ சென்று, இந்த குறிப்பிட்ட இடம் எங்கு உள்ளது? என கேட்போம்.

அந்த காலம் மாறிப்போய் இப்போது நாமே இடத்தை எளிதாக கண்டுப்பிடிக்கிறோம். இதற்கு காரணம் நம் கையில் உள்ள செல்போன் மற்றும் கூகுள் மேப். இந்த வசதி அனைத்து ஆண்டிராய்டு போன்களிலும் உள்ளது.



நாம் எங்கிருந்தாலும், எங்கு செல்ல வேண்டும் என்றாலும், மேப் காட்டும் ரூட்டில் டோராவைப் போல் செல்ல ஆரம்பித்துவிட்டோம். அப்படி சென்றபோது அமெரிக்காவில் ஒரு எதிர்ப்பாராத சம்பவம் அரங்கேறியுள்ளது.

அமெரிக்காவின் கொலார்டோ மாநிலத்தில் உள்ள டென்வேர் சர்வதேச விமான நிலையம் செல்ல, வெவ்வேறு இடத்தில் இருந்துக் கொண்டு சிலர் கூகுள் மேப்பின் உதவியை நாடியுள்ளனர்.



அவர்களுக்கு கூகுள், குறைந்த நேரத்தில் விரைவில் விமான நிலையம் அடைய குறுக்குப் பாதையை காட்டியுள்ளது. குறைந்த நேரத்தில் செல்லும் என்பதால் 100 பேர் இதனை பின்தொடர்ந்து காரில் சென்றுள்ளனர்.

இந்த பாதை மிகவும் மோசமானதாக இருந்துள்ளது. இருப்பினும் சென்றுள்ளனர். ஒரு இடத்தில் 100 கார்களும் போக வழியின்றி சிக்கியுள்ளன. பின்னர்தான் தெரிந்தது தவறான பாதை என்று.

இது குறித்து அங்கு வந்திருந்த மான்சிஸ் கூறுகையில், ‘கணவரை அழைக்க விமான நிலையம் வருவதற்காக கூகுள் மேப்பில் குறைந்த நேரத்தில் செல்லக்கூடிய பாதையை தேடினேன்.

இந்த பாதையை தான் காட்டியது. இங்கு வந்து பார்த்தால் என்னைப்போல் 100 கார்கள் நிற்கின்றன. கடைசியாகதான் தெரிந்தது. தவறான பாதை என்று’ என கூறினார்.

இந்த விவகாரம் குறித்து கூகுள் நிறுவனம் கூறுகையில், ‘கூகுள் மேப்பில் ஒரு வழியை தேர்வு செய்து காட்டும்போது, சாலையின் அளவு மற்றும் அந்த பாதையில் பயணிக்கும் நேரம் ஆகியவற்றை தேர்ந்தெடுத்துதான் காட்டுவோம். சில நேரங்களில் இப்படி நடக்கிறது’ என கூறியுள்ளது.  

 


 
Tags:    

Similar News