செய்திகள்

பயங்கரவாதம் மனித குலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது- மோடி

Published On 2019-06-28 03:44 GMT   |   Update On 2019-06-28 03:44 GMT
பயங்கரவாதம் மனித குலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை பயங்கரவாதம் கடுமையாக பாதிப்பதாகவும் கூறினார்.
ஒசாகா:

ஜப்பானில் உள்ள ஒசாகா நகரில் ஜி 20 உச்சி மாநாடு இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மாநாட்டுக்கு இடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோரை சந்தித்து பேசினார்.



அதன் பின்னர், ஒசாகா நகரில், 'பிரிக்ஸ்' அமைப்பு தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜிங்பிங், ரஷ்ய அதிபர் புதின், பிரேசில் அதிபர், தென் ஆப்பிரிக்க அதிபர் ஆகியோர் இதில் பங்கேற்றனர். அப்போது, பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் மத்தியில் பேசிய மோடி, பயங்கரவாதம் மனித குலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்று கூறினார்.

“பயங்கரவாதத்தால், அப்பாவி மனித உயிர்கள் பலியாவதோடு, பொருளாதார வளர்ச்சி, சமூக ஸ்திரத்தன்மை கடுமையாக பாதிக்கப்படுகிறது. பயங்கரவாதம் மற்றும் இனவாதத்துக்கு கிடைக்கும் ஆதரவை நாம் தடுத்த நிறுத்த வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்” என மோடி வலியுறுத்தினார்.

மேலும் உலக வர்த்தக அமைப்பை வலுப்படுத்துதல், ஆற்றல் பாதுகாப்பை உறுதி செய்தல், உலக பொருளாதார வீழ்ச்சி, போட்டித்தன்மை உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் மோடி பேசினார்.
Tags:    

Similar News