செய்திகள்

ரஷியாவில் கட்டிடத்தில் மோதி விமானம் தீப்பிடித்து விபத்து - 2 விமானிகள் உடல் கருகி பலி

Published On 2019-06-27 18:47 GMT   |   Update On 2019-06-27 18:47 GMT
ரஷியாவில் விமானம் அவசரமாக தரையிறங்கியபோது கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் விமானிகள் இருவரும் உடல் கருகி உயிர் இழந்தனர்.
மாஸ்கோ:

ரஷியாவின் பிரியாத்தியா பிராந்தியத்தில் உள்ள நில்நியான்கார்ஸ்க் நகர விமான நிலையத்தில் இருந்து பிராந்திய தலைநகர் யூலன்-ஊடேவுக்கு நேற்று அதிகாலை பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.

விமானத்தில் 43 பயணிகளும், 2 விமானிகளும் இருந்தனர். விமானம் பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் திடீரென என்ஜின் செயலிழந்தது. அதனை அறிந்த விமானிகள் உடனடியாக விமானத்தை நில்நியான்கார்ஸ்க் விமான நிலையத்துக்கு திருப்பினர். அங்கு விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது ஓடுபாதையில் இருந்து சறுக்கி 100 மீட்டர் தூரத்துக்கு சென்ற விமானம், அங்கு உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு கட்டிடத்தின் மீது மோதியது.

இதில் விமானத்தில் தீப்பிடித்தது. விமான நிலையத்தில் இருந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். எனினும் இந்த கோர விபத்தில் விமானிகள் இருவரும் உடல் கருகி உயிர் இழந்தனர். இதையடுத்து பயணிகள் 43 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

அவர்களில் 7 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டிருந்தது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. 
Tags:    

Similar News