செய்திகள்

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை தூக்கில் போட இலங்கை அதிபர் உத்தரவு

Published On 2019-06-26 10:31 GMT   |   Update On 2019-06-26 10:31 GMT
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தண்டிக்கப்பட்ட 4 குற்றவாளிகளை தூக்கிட்டுக் கொல்லும் உத்தரவில் இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா இன்று கையொப்பமிட்டார்.
கொழும்பு:

இலங்கையில் கொடும்குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கும் சட்டம் நடைமுறையில் இருந்தாலும் கடந்த 43 ஆண்டுகளாக இதுவரை யாருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதில்லை.

கருணை மனுக்களின் அடிப்படையில் பலரது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து முன்னாள் அதிபர்கள் உத்தரவிட்டிருந்தனர்.

இலங்கையில் ஜூன் 23 முதல் ஜூலை முதல்தேதி வரை ஒருவார காலத்துக்கு போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு வாரம் அணுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் முன்னர் தண்டிக்கப்பட்ட 4 குற்றவாளிகளை தூக்கிட்டுக் கொல்லும் உத்தரவில் இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா இன்று கையொப்பமிட்டார்.

சிறைக்குள் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நேரலாம் என்பதால் அவர்களுக்கு மரண தண்டனை எந்த தேதியில்  நிறைவேற்றப்படும் என்று வெளிப்படையாக தெரிவிக்க இயலாது, விரைவில் அவர் தூக்கிலிடப்படுவார்கள் என்று சிறிசேனா குறிப்பிட்டார்.

இலங்கை சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 24 ஆயிரம் கைதிகளில் 60 சதவீதம் பேர் போதைப்பழக்கத்துக்கு அடிமையான குற்றச்சாட்டுகளில் தண்டிக்கப்பட்டவர்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Tags:    

Similar News