செய்திகள்

ஐதராபாத் நிஜாம் பணம் யாருக்கு சொந்தம்?- இந்தியா-பாகிஸ்தான் மோதலில் விரைவில் தீர்ப்பு

Published On 2019-06-26 03:04 GMT   |   Update On 2019-06-26 03:04 GMT
லண்டன் வங்கியில் உள்ள ஐதராபாத் நிஜாம் பணம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பாக லண்டன் கோர்ட்டில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பல ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கில் இன்னும் 6 வாரங்களில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லண்டன் :

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது, தனி சமஸ்தானமாக இருந்த ஐதராபாத்தை இந்தியாவுடன் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதை எதிர்கொள்ள பாகிஸ்தான் தரப்பில், நிஜாமுக்கு ஆயுதங்கள் அளிக்கப்பட்டன. அதற்கு பிரதி உபகாரமாக, 1948-ம் ஆண்டு, ஐதராபாத் நிஜாமின் 10 லட்சத்து 800 பவுண்டு பணம், இங்கிலாந்தில் இருந்த பாகிஸ்தான் தூதர் ஹபிப் இப்ராகிம் ரஹிம்தூலாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

அப்பணம், பாகிஸ்தான் தூதர் பெயரில் லண்டனில் உள்ள நேட்வெஸ்ட் வங்கி கணக்கில் போடப்பட்டது. பின்னாளில், அப்பணத்தை நிஜாம் திரும்பக்கோரினார். பாகிஸ்தான் மறுக்கவே, யார் உரிமையாளர்? என்று தெளிவான பிறகு பணத்தை ஒப்படைப்பதாக வங்கி நிர்வாகம் தெரிவித்தது.



இதுதொடர்பாக லண்டன் கோர்ட்டில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பல ஆண்டுகளாக வழக்கு நடந்து வருகிறது. நிஜாமின் வாரிசுகள், இந்திய அரசுடன் கைகோர்த்து வழக்கை நடத்தி வருகிறார்கள்.

கடந்த 2 வாரங்களாக இறுதிக்கட்ட விசாரணை நடந்தது. இதையடுத்து, இன்னும் 6 வாரங்களில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லண்டன் வங்கியில் உள்ள பணம், தற்போது 3 கோடியே 50 லட்சம் பவுண்டுகளாக (ரூ.315 கோடி) பெருகி உள்ளது.
Tags:    

Similar News