செய்திகள்

பிரிட்டன் புதிய பிரதமரின் பெயர் ஜூலை 23-ம் தேதி வெளியாகிறது

Published On 2019-06-25 13:42 GMT   |   Update On 2019-06-25 13:42 GMT
பிரிட்டன் நாட்டின் அடுத்த ஆளும்கட்சியின் தலைவர் மற்றும் பிரதமர் யார்? என்பது ஜூலை 23-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன்:

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து 2019 மார்ச் இறுதிக்குள் வெளியேற பிரிட்டன் அரசு முடிவு செய்தது. ஆனால், ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்புடன்  பிரிட்டன் பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை அந்நாட்டு எம்.பி.க்கள் ஏற்க மறுத்துவிட்டனர். 

இதனால்  பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் 3 முறை பெருவாரியான ஓட்டுவித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ஆளும் பழமைவாத  கட்சி உறுப்பினர்களே தெரசா மே ஏற்படுத்திய ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தை ஆதரிக்காத நிலையில் முன்னர் சில மந்திரிகள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.
 
பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பான தெரசா மேயின் புதிய கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது கட்சியை சேர்ந்த மூத்த பெண் மந்திரி ஆண்ட்ரியா லீட்ஸம் தனது பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். பிரதமர் பதவி மற்றும் ஆளும்கட்சி தலைவர் பதவியில் இருந்து தெரசா மே விலக வேண்டும் என்ற எதிர்ப்பு குரல் தொடர்ந்து அதிகரித்து வந்தது.

இதைத்தொடர்ந்து, பழமைவாத (கன்சர்வேட்டிவ்) கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த 7-ம் தேதி தெரசா மே அறிவித்தார். கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமர் பதவியில் நீடிப்பேன் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.



இதையடுத்து, ஆளும் பழமைவாத (கன்சர்வேட்டிவ்) கட்சியின் புதிய தலைவரையும், நாட்டுக்கு புதிய பிரதமரையும் தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியது. 

மொத்தம் பத்து பேர் இந்த பதவிக்கு வர விருப்பம் தெரிவித்த நிலையில் பிரதான வேட்பாளர்களாக முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி போரிஸ் ஜான்சன் மற்றும் வெளியுறவுத்துறை உயரதிகாரி ஜெரேமி ஹன்ட் ஆகியோரை பிரிட்டன் பாராளுமன்ற ஆளும்கட்சி எம்.பி.க்கள் 313 பேர் இறுதிச்சுற்றில் வைத்துள்ளனர்.

இப்போது ஆளும்கட்சியை சேர்ந்த உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் இவர்களில் ஒருவரை தலைவராக தேர்வு செய்ய வேண்டியுள்ளது.

இந்நிலையில், பிரிட்டன் நாட்டின் அடுத்த ஆளும்கட்சியின் தலைவர் மற்றும் பிரதமர் யார்? என்பது ஜூலை 23-ம் தேதி வெளியாகும் என இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலுக்கான தபால் ஓட்டுச் சீட்டுகள் ஜூலை 6 மற்றும் 8-ம் தேதிக்குள் உயர்மட்டக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அவை ஜூலை 22-ம் தேதி மாலை 5 மணிக்குள் திருப்பி அனுப்பி வைக்கப்படும் என கன்சர்வேடிவ் கட்சி தலைமை இன்று அறிவித்துள்ளது.

ஜூலை 23-ம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவில் ஆளும்கட்சியின் தலைவர் யார்? என்று அறிவிக்கப்பட்ட பின்னர், தெரசா மே பக்கிங்காம் அரண்மனைக்கு சென்று முறைப்படி தனது ராஜினாமா கடிதத்தை பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபத்திடம் அளிப்பார்.

அதன் பின்னர் ஆளும்கட்சியின் புதிய தலைவரை நாட்டின் பிரதமராக அங்கீகரிக்கும் உத்தரவை ராணி பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News