செய்திகள்

கம்போடியா கட்டிட விபத்து- இடிபாடுகளில் சிக்கிய 2 பேர் உயிருடன் மீட்பு

Published On 2019-06-24 14:05 GMT   |   Update On 2019-06-24 14:05 GMT
கம்போடியாவில் விபத்துக்குள்ளான 7 மாடி கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கிய இரண்டு நபர்கள், 2 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
நோம் பென்:

கம்போடியா நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள பிரபல சூதாட்ட நகரமான சிஹானோக்வில்லி பகுதியில் சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனம் 7 மாடிகளை கொண்ட புதிய கட்டிடத்தை கட்டி வந்தது. இந்த கட்டிடத்தின் 80 சதவீதம் பணிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது. தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது, இந்த விபத்து ஏற்பட்டதால், இவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். 

இதையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை நிலவரப்படி 25 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. சுமார் 25 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

விபத்து ஏற்பட்டு 2 நாட்கள் ஆனதால், இடிபாடுகளில் சிக்கியவர்கள் உயிர்பிழைக்க வாய்ப்பு இல்லை என அதிகாரிகள் கூறியிருந்தனர். ஆனால், இன்றைய மீட்பு பணியின்போது இடிபாடுகளில் சிக்கிய 2 பேர் உயிருடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

உடனடியாக அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இரண்டு நாட்களாக சாப்பிடாமல் இருந்ததால் அவர்கள் மிகவும் சோர்வுடன் காணப்பட்டனர். முதலில் அவர்களுக்கு  தண்ணீர் கொடுத்து, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் சிலரைக் காணவில்லை என்பதால் மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

கட்டிட விபத்து தொடர்பாக கட்டுமான நிறுவன உரிமையாளர், ஒப்பந்ததாரர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நில உரிமையாளரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News