செய்திகள்

தூக்கத்தில் மோசமான கனவினால் லேண்டிங் ஆன விமானத்தின் இருட்டில் சிக்கிய பயணி

Published On 2019-06-24 10:33 GMT   |   Update On 2019-06-24 10:33 GMT
தூக்கத்தில் மோசமான கனவு கண்டதால் லேண்டிங் ஆன விமானத்தின் இருட்டில் சிக்கி பயணி தவித்துள்ளார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டாவா:

கனடாவில் உள்ள கியூபெக் பகுதியைச் சேர்ந்தவர் டிபானி ஆதம்ஸ். இவர் கியூபெக்கில் இருந்து டொரண்டோ பகுதிக்கு ஏர் கனடா விமானத்தில் கடந்த ஜூன் 9ம் தேதி சென்றார்.

விமானம் நடுவானில் சென்றபோது தூக்கம் வரவே, கண் மூடிய அவர் பயங்கரமாக தூங்கியுள்ளார். டிபானி, விழித்துப் பார்த்துள்ளார். விமானம் இருட்டாக இருந்துள்ளது. அக்கம் பக்கம் யாரும் இல்லை.



நாம் எங்கே இருக்கிறோம்? என்பதுக்கூட தெரியாமல் இருந்துள்ளார். பின்னர் விழித்தவுடன்தான் விமானத்தில் இருந்தது தெரிய வந்துள்ளது. என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துள்ளார்.

உடனடியாக தனது தோழிக்கு போன் செய்து சொல்லலாம் என நினைத்து செல்போனை எடுத்துள்ளார். செல்போனில் சார்ஜ் கடைசியில் இருந்துள்ளது.

அங்கு சார்ஜ் ஏற்ற வழி உள்ளதா என இருட்டில் அங்கும் இங்கும் ஓடி திணறியுள்ளார். விமானத்தில் விளக்குகள் இல்லை என்பதால் என்ன செய்வதென்றே தெரியாமல், விமானத்தின் காக்பிட் அருகே சென்றுப் பார்த்துள்ளார்.

கதவை தட்டிப்பார்த்தும், திறக்கப் பார்த்தும் எவ்வித பலனும் இல்லாமல் போனது. அங்கேயே கதவின் அருகே உட்கார்ந்தார். சிறிது நேரம் கழித்து எதிரே சரக்குகளை விமானத்துக்கு கொண்டு செல்லும் சரக்கு வாகனம் ஒன்று வந்துள்ளதை பார்த்தார்.



செல்போனில் கடைசியாக இருந்த சார்ஜைக் கொண்டு பிளாஷ் லைட் அடித்துள்ளார் டிபானி. அந்த வாகன ஓட்டுநர், லேண்டிங் ஆன விமானத்தில் இருந்து வந்த சிறிய வெளிச்சத்தை கவனிக்கவே, விமான அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளார். பின்னர் டிபானி வெளியே கொண்டுவரப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து டிபானி தனது சமூக வலைதளப் பக்கத்தில், ‘இது எப்படி நடந்தது என்றே தெரியவில்லை. பயணிகள் இறங்கியதாக நினைத்து விமான ஊழியர்களும் இறங்கிவிட்டனர். அப்போது நான் மிகவும் மோசமான கனவில் சிக்கிக் கொண்டேன்.

அதனால்தான் இப்படி மாட்டிக் கொண்டேன். சரக்கு வண்டியின் ஓட்டுநர், நான் வெளியே வந்ததும்,  ‘எப்படி உங்களை விட்டு விட்டுச் சென்றார்கள்?’ என கேட்டார். அந்த அதிசயத்தைதான் நானும் நினைத்து திகைத்துக் கொண்டிருக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.  

இச்சம்பவத்திற்கு ஏர் கனடா நிறுவனம் டிபானி ஆதம்சிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News