செய்திகள்

அமெரிக்க புதிய ராணுவ மந்திரியாக மார்க் எஸ்பர் தேர்வு

Published On 2019-06-22 21:51 GMT   |   Update On 2019-06-23 08:26 GMT
அமெரிக்காவின் புதிய ராணுவ மந்திரியாக மார்க் எஸ்பர் (வயது 55) என்பவரை ஜனாதிபதி டிரம்ப் தேர்வு செய்தார்.
வாஷிங்டன்:

வல்லரசு நாடுகளுடன் 2015-ம் ஆண்டு, ஈரான் செய்து கொண்ட அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த ஆண்டு திடீரென விலகியது. அதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையேயான உறவு மிக மோசமாகி வருகிறது.

சமீபத்தில் கூட அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியது. அதைத் தொடர்ந்து ஈரானின் 3 ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டு, பின்னர் கடைசி நேரத்தில் திரும்பப்பெற்றார். இந்த நெருக்கடியான கால கட்டத்தில் இப்போது அமெரிக்காவில் ராணுவ மந்திரி பதவி காலியாக உள்ளது. ராணுவ மந்திரியாக இருந்து வந்த ஜிம் மேட்டிஸ் கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி பதவி விலகினார். அதைத் தொடர்ந்து ராணுவ மந்திரி பொறுப்பை வகித்து வந்த பேட்ரிக் ஷனகன் அந்தப் பதவியில் தொடர விரும்பவில்லை.



இந்த நிலையில் புதிய ராணுவ மந்திரியாக மார்க் எஸ்பர் (வயது 55) என்பவரை ஜனாதிபதி டிரம்ப் தேர்வு செய்தார்.

இவரது நியமனத்துக்கு நாடாளுமன்ற செனட் சபை ஒப்புதல் அளிக்க வேண்டும். செனட் சபையில் குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை பலம் உள்ளதால் மார்க் எஸ்பர் நியமனத்துக்கு ஒப்புதல் கிடைப்பதில் சிக்கல் ஏதும் இருக்காது. 
Tags:    

Similar News