செய்திகள்

ஐ.நா. சபையில் ஓம், சாந்தி முழக்கங்களுடன் நடைபெற்ற மாபெரும் யோகா முகாம்

Published On 2019-06-21 09:11 GMT   |   Update On 2019-06-21 09:11 GMT
ஐக்கிய நாடுகள் சபையின் கூட்ட அரங்கில் இன்று ‘ஓம், சாந்தி’ என்ற முழக்கங்களுடன் மாபெரும் யோகாசன முகாம் விமரிசையாக நடைபெற்றது.
நியூயார்க்:

ஐந்தாவது சர்வதேச யோகா தினத்தையொட்டி நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் மாபெரும் யோகாசன முகாமுக்கு இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்தியாவின் பழம்பெருமை மிக்க யோகாசன கலையின் மகத்துவத்தை சிறப்பிக்கும் வகையில் ‘பக்தி யோகா, கர்ம யோகா, ஞான யோகா, ராஜயோகா’ ஆகிய ஆசனங்களை விவரிக்கும் விளக்கப்படங்களை கொண்ட கண்காட்சி ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள புல்வெளியில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் மாபெரும் யோகாசன முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், இந்நிகழ்ச்சிக்காக குறிப்பிடப்பட்டிருந்த நேரத்தில் திடீரென்று மழை பெய்ததால் பல நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கூடி விவாதிக்கும் கூட்ட அரங்கத்தில் யோகாசன முகாம் நடத்தப்பட்டது.



ஐக்கிய நாடுகள் சபை வரலாற்றில் முதன்முறையாக கூட்ட அரங்கத்தினுள் நடைபெற்ற இம்முகாமுக்கு தலைமை வகித்த ஐ.நா.சபை துணை பொதுச்செயலாளர் ஆமினா முஹம்மது யோகாசன கலையின் பல்வேறு சிறப்பம்சங்களை குறிப்பிட்டு பேசினார்.

யோகாசனம் நமக்குள் மட்டும் சமநிலையை ஏற்படுத்தாமல் நம்மை சுற்றியுள்ள உறவுகள், நட்புகள் மற்றும் மனிதத்தின் மீதும் சமநிலையை கடைபிடிக்க உதவுவதாக அவர் தெரிவித்தார். தொடர்ந்து யோகாசனம் செய்து வந்தால் சமுதாயம் மற்றும் பூமியின் நலன்களை பாதுகாக்கும் தலைமைத்துவம் நமக்குள் உருவாகும்.

பசுமைசார்ந்த வளர்ச்சி, இயற்கையோடு ஒன்றிணைந்து வாழும் வாழ்க்கைமுறை, சகிப்புத்தன்மை, அமைதி, நீதிவழுவாமை ஆகியவற்றை ஊக்குவித்து பருவநிலை மாற்றம் என்னும் தீமையில் இருந்து இந்த பூமியை காப்பாற்றவும் யோகாசனம் உறுதுணையாக இருக்கும் என்றும் ஆமினா முஹம்மது குறிப்பிட்டார்.

முன்னதாக, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தி வீடியோவாக ஒளிபரப்பப்பட்டது.

Tags:    

Similar News