செய்திகள்

கசோக்கியை கொன்றவர்கள் அதற்கான விலையை கொடுத்தே ஆகவேண்டும் - துருக்கி அதிபர் எச்சரிக்கை

Published On 2019-06-20 15:18 GMT   |   Update On 2019-06-20 15:18 GMT
பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியை படுகொலை செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என துருக்கி அதிபர் எர்டோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்தான்புல்:

சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி துணை தூதரகத்திற்கு கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி, சென்றபோது படுகொலை செய்யப்பட்டார். இதில் சவுதி அரசுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன. ஆனால் சவுதி அரசு இதனை மறுத்து வந்தது.
 
இதற்கிடையே, ஜமால் கசோக்கியின் கொலை குறித்து விசாரணை நடத்த ஐ.நா சபையின் சிறப்பு அறிக்கையாளர் ஆக்னஸ் கலாமார்ட், கடந்த ஜனவரி மாதம் துருக்கி சென்றார். அங்கு அவர் பல்வேறு கட்ட விசாரணைகளை நடத்தி தற்போது தனது விசாரணை அறிக்கையை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், “சவுதி அரேபிய அதிகாரிகளால் முன்னதாகவே திட்டமிடப்பட்டு மிருகத்தனமாக ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையில் சவுதி மன்னர் முகமது பின் சல்மானின் ரகசிய பாதுகாப்பு படையினர் 15 பேர் ஈடுபட்டுள்ளனர். மேலும் கொலை சம்பவத்தில் சவுதி மன்னரின் பங்கு மிக அதிகமாக உள்ளதற்கான ஆதாரங்கள் வலிமையாக உள்ளது என தெரிவித்துள்ளார்.



இந்நிலையில், பத்திரிகையாளர் கசோக்கியை படுகொலை செய்தவர்கள் அதற்கான விலையை கொடுத்தே ஆக வேண்டும் என துருக்கி அதிபர் எர்டோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, எர்டோகன் கூறுகையில், பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி துணை தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் சவுதி மன்னர் முகமது பின் சல்மானின் ரகசிய பாதுகாப்பு படையினர் 15 பேருக்கு தொடர்புள்ளதாக ஐ.நா அறிக்கை தெரிவிக்கிறது . ஆகையால் கொலை குற்றத்தில் ஈடுபட்ட சவுதி அரேபிய அரசு குற்றத்தினை ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும், இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.
Tags:    

Similar News