செய்திகள்

மாலியில் 2 கிராமங்களில் மர்ம நபர்கள் கொலைவெறி தாக்குதல் - 41 பேர் கொன்று குவிப்பு

Published On 2019-06-19 20:20 GMT   |   Update On 2019-06-19 20:20 GMT
மாலியில் உள்ள கங்காபானி மற்றும் யோரோ ஆகிய 2 கிராமங்களில் மர்ம நபர்கள் நிகழ்த்திய கொலைவெறி தாக்குதலில் 41 பேர் கொலை செய்யப்பட்டனர்.
பமாகோ:

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் வேட்டைக்காரர்களான டோகோன் இனத்தவர்களுக்கும், மேய்ச்சல் இன நாடோடிகளான புலானி இனத்தவர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நிகழ்கின்றன. அண்மையில் நாட்டின் மத்திய பகுதியில், டோகான் இனத்தவர்கள் அதிகம் வாழும் சோபனே-கோவ் கிராமத்துக்குள் ஆயுதம் ஏந்திய குழுக்கள் புகுந்து நடத்திய கொடூர தாக்குதலில் சுமார் 100 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மத்திய பகுதியில் உள்ள கங்காபானி மற்றும் யோரோ ஆகிய 2 கிராமங்களுக்குள் நேற்று முன்தினம் இரவு ஆயுதம் ஏந்திய குழுக்கள் புகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்தினர். துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கங்காபானி கிராமத்துக்குள் நுழைந்த 100-க்கும் மேற்பட்டோர், வீடுகளுக்குள் இருந்துவர்களை வெளியே இழுத்து வந்தது, கொடூரமாக கொலை செய்தனர். மேலும் பல வீடுகளை தீவைத்து எரிந்தனர்.

இதில் 17 பேர் கொல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். பின்னர் யோரோ கிராமத்துக்கு சென்ற அவர்கள் கிராமவாசிகள் 24 பேரை சுட்டுக்கொன்றனர்.

இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பு ஏற்காத நிலையில், இது பயங்கரவாதிகளின் சதிச்செயல் என அரசு தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News