செய்திகள்

உக்ரைனில் எம்.எச் 17 மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக 4 பேர் மீது வழக்கு

Published On 2019-06-19 16:18 GMT   |   Update On 2019-06-19 16:18 GMT
மலேசியா விமானம் எம்.எச் 17 சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக ரஷியா, உக்ரைன் நாடுகளை சேர்ந்த 4 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது என சர்வதேச விசாரணை குழு தெரிவித்துள்ளது.
ஆம்ஸ்டர்டாம்:

நெதர்லாந்தில் இருந்து 2014, ஜூலை மாதம் 17-ம் தேதி மலேசியாவுக்கு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் எம்.எச்.17 ரக பயணிகள் விமானம் உக்ரைன் வான்பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது.

உக்ரைன் ராணுவத்துக்கும் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும் இடையே உக்கிரமாக சண்டை நடைபெற்று வந்த போது ரஷிய எல்லைப் பகுதி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில், 15 விமான ஊழியர்கள் உள்பட விமானத்தில் பயணம் செய்த 298 பேரும் உயிரிழந்தனர். 
 
விமானத்தை ரஷ்யா ஆதரவு பிரிவினைவாதிகள் தான் சுட்டு வீழ்த்தினர் என உக்ரைன் குற்றம் சாட்டியது. ஆனால், உக்ரைன் படைகள்தான் பொறுப்பு என ரஷியாவும் பிரிவினைவாதிகளும் கூறின.



இந்நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்த சர்வதேச விசாரணைக்குழு தனது விசாரணை அறிக்கையை இன்று வெளியிட்டது. 

அதில் உக்ரைனில் விழுந்து நொறுங்கிய மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக 4 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதில்,
இகோர் கிர்கின், செர்கெய் டுபின்ஸ்கி மற்றும் ஒலெக் புல்டோவ் ஆகிய மூன்று ரஷ்யர்களும், லியோனிட் கார்சென்கோ என்னும் ஓர் உக்ரைன் நாட்டவரும் விமானத்தை சுட்டு வீழ்த்தி 298 பேரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பான நீதிமன்ற வழக்கு நெதர்லாந்தில் 2020 மார்ச்சில் தொடங்குகிறது என்றும், 4 பேருக்கு எதிராக சர்வதேச கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், ஏவுகணை தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என ரஷிய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. 
Tags:    

Similar News