செய்திகள்

உயிரணு தானம் செய்தவர் தான் குழந்தையின் சட்டப்பூர்வ தந்தை- ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Published On 2019-06-19 10:40 GMT   |   Update On 2019-06-19 10:40 GMT
உயிரணு தானம் செய்தவர் தான் குழந்தையின் சட்டப்பூர்வ தந்தை என ஆஸ்திரேலிய உச்சநீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வழங்கி உள்ளது.
சிட்னி:

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், தனது தோழி குழந்தை பெற்றுக்கொள்வதற்காக 2006-ம் ஆண்டு உயிரணுக்கள் தானம் செய்துள்ளார். இதன்மூலம், பெண் குழந்தை பிறந்துள்ளது. அதன்பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கிடையிலான நட்பு முறிந்தது. எனினும், குழந்தையின் பிறப்பு சான்றிதழில், அந்த ஆணின் பெயர் ‘பெற்றோர்’ என அடையாளம் காட்டப்பட்டுள்ளது. அந்த குழந்தையும் அவரை ‘டாடி’ என்றே அழைத்துள்ளது.

இந்நிலையில், அவருடனான நட்பை முறித்துக்கொண்ட தோழி, குழந்தையுடன் நியூசிலாந்து செல்ல முடிவு செய்தார். இதனால் அதிருப்தி அடைந்த அந்த நபர், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், குழந்தையின் பயாலஜிக்கல் தந்தையாக தன்னை அறிவிக்க வேண்டும் என்றும், குழந்தையுடன் தனது மனைவி நியூசிலாந்து செல்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். குழந்தையின் தந்தை என்பதற்கான ஆவணத்தையும் தாக்கல் செய்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், உயிரணு தானம் செய்திருப்பதை வைத்து, மனுதாரர் குழந்தையின் தந்தை என உரிமை கோர முடியாது என தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.


உச்சநீதிமன்றத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, உயிரணு தானம் செய்தவர்தான், குழந்தையின் தந்தை என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. அத்துடன் கீழ்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிராகரித்தது.

மனுதாரர் சட்டப்பூர்வ தந்தை என அறிவிக்கப்பட்டதால், அவரது குடும்பம் நியூசிலாந்து செல்ல முடியாது. உயிரணு தானம் மூலம் பிறந்த, பெண் குழந்தைக்கு தற்போது 11 வயது ஆகிறது.
Tags:    

Similar News