செய்திகள்

பாகிஸ்தானில் வலைத்தள கட்டுரையாளர் குத்தி கொலை

Published On 2019-06-17 20:04 GMT   |   Update On 2019-06-17 20:04 GMT
பாகிஸ்தானில் மர்மநபர்களால் கடத்தி செல்லப்பட்ட வலைத்தள கட்டுரையாளர் முகமது திலால் கான் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை சேர்ந்த பிரபல வலைத்தள கட்டுரையாளர் முகமது திலால் கான். சமூக வலைத்தளங்களில் இவர் மிகவும் பிரபலமானவர். இவரை ‘பேஸ்புக்’கில் 16 ஆயிரம் பேரும், டுவிட்டரில் 22 ஆயிரம் பேரும் பின்தொடர்கிறார்கள்.

இந்த நிலையில், நேற்று காலை முகமது திலால் கானுக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் முகமது திலால் கானை குறிப்பிட்ட இடத்துக்கு வரும்படி அழைத்தார்.

அதன்படி அவர் தனது நண்பரை அழைத்துக்கொண்டு அந்த இடத்துக்கு சென்றார். அங்கு தயார் நிலையில் இருந்த மர்மநபர்கள் கத்தி முனையில் அவர்கள் இருவரையும் அடர்ந்த காட்டுக்குள் அழைத்துச் சென்றனர்.

பின்னர் அவர்கள் முகமது திலால் கானை கத்தியால் குத்தி கொலை செய்தனர். அவரது நண்பரையும் கத்தியால் சரமாரியாக குத்தினர். ஆனால் அவர் படுகாயங்களுடன் அவர்களிடம் இருந்து தப்பினார்.

அவர் அளித்த தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முகமது திலால் கானின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News