செய்திகள்

துபாயில் கடலில் மூழ்கி இந்தியர் பலி

Published On 2019-06-17 01:03 GMT   |   Update On 2019-06-17 01:03 GMT
துபாயில் கடலில் உற்சாகமாக குளித்துக்கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு இந்தியர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துபாய்:

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் மனைவி மற்றும் 3 மகன்களுடன் வாழ்ந்து வந்தவர் ஜான் பிரீட்டம் பவுல் (வயது 40). இந்தியரான இவர் பெங்களூருவை சேர்ந்தவர் ஆவார். துபாயில் உள்ள தனியார் வானொலியில் விற்பனை பிரிவு தலைவராக பணியாற்றி வந்த ஜான் பிரீட்டம் பவுல், 14 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், ஜான் பிரீட்டம் பவுலின் சகோதரி மற்றும் அவரது கணவர் துபாய்க்கு சுற்றுலா சென்றனர். இதையொட்டி பிரீட்டம் பவுல் தனது மனைவி, மகன்கள் மற்றும் உறவினர்களோடு, புகழ்பெற்ற ஜூமைரா கடற்கரைக்கு நேற்று முன்தினம் சென்றார்.

அங்கு ஜான் பிரீட்டம் பவுல் கடலில் உற்சாகமாக குளித்துக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென நீரில் மூழ்கினார். சற்று நேரத்தில் மயங்கிய நிலையில் அவர் நீரில் மிதந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், நீரில் மூழ்கி இறந்ததாக டாக்டர்கள் கூறினர். பிரேதபரிசோதனைக்கு பிறகு ஜான் பிரீட்டம் பவுலின் உடல் அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இறுதி சடங்குக்காக அவரது உடலை சொந்த ஊரான பெங்களூருக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 
Tags:    

Similar News